டெஹ்ரான்: ஈரான் நாட்டில் பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியதில் பயணிகள் உள்பட 66 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து இஸ்பாஹன் மாகாணத்தில் உள்ள யசூச் நகரத்திற்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 66 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடுவானில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென ரேடாரில் இருந்து விமானம் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, டெஹ்ரானில் இருந்து 480 கி.மீ தொலைவில் தென்மேற்கு பகுதியில் உளள செமிரோம் மலைப்பகுதியில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதாக ஊடகங்களில் இருந்து செய்தி வெளியானது.
விமானம் பறந்த வேகத்தில் கீழே விழுந்ததால் அதில் பயணித்த 66 பேரும் உயிரிழந்துள்ளதாக ஈரான் அஸீமான் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கோர விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், 66 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.