இந்தியாவிலேயே அதிகமாக சேமிக்கும் பழக்கமுள்ளவர்கள் தமிழர்கள்தான்.தங்கள் பிள்ளைகளுக்கும் சிறுவயது முதலே சேமிக்க கற்று கொடுக்கின்றனர்.இருப்பினும் சிறுக சிறுக சேமிப்பதை நயவஞ்சகமாக புடுங்கி ஏப்பம் விடும் ஓநாய்களாக பல பைனான்ஸ்கள் முளைத்து ஓட்டம் பிடிப்பது வருடந்தோறும் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.ஆனால் புதிய நூதன மோசடி ஒன்று சத்தமில்லாமல் தமிழகத்தில் அதிலும் குறிப்பாக முக்கிய நகரங்களான கோயம்புத்தூர் ,சென்னை மற்றும் சேலத்திலும் அரங்கேறியிருப்பது அம்பலமாகியுள்ளது .இது ஒரு மோசடி மாஃபியாக இருக்கும் என்ற அச்சமும் முதலீட்டாளர்களை கலக்கமடைய செய்துள்ளது.
பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யும் மெரிடியோ டிரேடிங் கம்பெனி(Meridio Trading Corporation), முதலீட்டாளர்களிடம் வசூலித்த பல கோடி ரூபாயை மோசடி செய்து வருவதாக போலீசில் புகார் கூறப்பட்டிருக்கிறது. மேலும், புதிய முதலீட்டாளர்களிடம் பெண்களை வைத்து கவர்ச்சிகரமாக பேசி பணம் வசூலித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவையில் இயங்கி வரும் மெரிடியோ டிரேடிங் கம்பெனி(Meridio Trading Corporation), நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து தேசிய பங்குச் சந்தை மற்றும் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் நிறுவனச் சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது. முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் முதலீட்டுத் தொகையில் குறைந்தபட்சம் 10 சதவீதத்தை லாபமாக தருவதாக கம்பெனி ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இதன் நிர்வாக இயக்குனராக கோபிச்செட்டிப்பாளையம் அம்பிகா நகரில் வசித்து வரும் ஜி.சரவணன் உள்ளார். ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் கிருஷ்ணமூர்த்தி தோட்டத்தில் வசிக்கும் ரவிக்குமார், கோபிச்செட்டிப்பாளையம் மாதேஸ்வரன் கோயில் தெருவில் உள்ள வாசு லேஅவுட்டில் வசிக்கும் எம்.வி.மகாதேவன் ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர்.
இவர்கள் கடந்த சில மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு மாதந்திர லாபத் தொகையும் தராமல், முதலீட்டு பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சில முதலீட்டாளர்கள் கோவையிலும், சென்னையிலும் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த மூவரும் வாடிக்கையாளர்களின் பணத்தை தங்கள் சொந்த பலனுக்கு பயன்படுத்தி கொண்டு, ஏமாற்றியிருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து, கோவையை சேர்ந்த முதலீட்டாளர் கூறியதாவது:நானும், எனது நண்பர்களும் இந்த நிறுவனத்தில் ரூ.3 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்திருக்கிறோம். இந்த நிறுவனம் ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களுக்கு முறையாக 10 சதவீத பணத்தை லாபமாக அளித்து வந்தது. ஆனால், அதற்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு மாதந்திர லாபத்தையும் தராமல், முதலீட்டு பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றத் தொடங்கியுள்ளனர்.இதன் இயக்குனர்களை தொடர்பு கொண்டால், அவர்கள் நேரடியாக பேசுவதில்லை. மேலும், நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்களை கொண்டு முதலீட்டாளர்களை மிரட்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, இந்த நிறுவனத்தின் 3 இயக்குனர்களும், கவர்ச்சிகரமாக பேசி புதிய முதலீட்டாளர்களை ஈர்த்து வருவதாக தெரிய வந்துள்ளது. இவர்களிடம் பணத்தை இழந்து ஏமாறாதீர்கள் என்று புதிய முதலீட்டாளர்களை எச்சரிக்க விரும்புகிறோம் என தெரிவித்தார்.