ரயில் கொள்ளை குறித்து தகவல் அளித்தால், அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என காவல்துறையும் சிபிசிஐடியும் இணைந்து அறிவித்துள்ளன.
கடந்த ஆகஸ்டு 8ம் தேதி சேலத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் மேற்கூரையை பெயர்த்தெடுத்து ரூ.5.75 கோடி ரூபாய் கொள்ளை போனது. இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனாலும் முக்கியமான தகவல்களோ, தடயங்களோ போலீசாருக்கு இதுவரை கிடைக்கவில்லை. கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், கொள்ளையர்களின் உருவங்களும் பதிவாகவில்லை.
முக்கியமாக, கொள்ளையடிக்கப்பட்ட ரயில் பெட்டியில் எந்த கைரேகையும் பதிவாகவில்லை. இது போலீசாருக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே கை தேர்ந்த கொள்ளையர்களால் மட்டுமே இதுபோன்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முடியும் என போலீசார் உறுதியாக நம்புகின்றனர்.
இந்நிலையில் ரயிலில் கொள்ளையடித்தவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக அளிக்கப்படும் என சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 044-28511600 என்ற தொலைபேசி எண்ணுக்கோ அல்லது 9940022422 அல்லது 9940033233 என்ற எண்களுக்கோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.