மகாராஷ்டிராவில், விஷம் கலந்த தண்ணீர் குடித்து 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 38 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து 420 கி.மீ தொலைவில் உள்ளது யவத்மால் என்ற கிராமம். இங்குள்ள கிராம மக்கள், ஆழ்துளை கிணறு மூலம் வரும் தண்ணீரை தான் குடித்து வந்தனர். இந்நிலையில், இங்குள்ள மக்கள் நேற்று முன்தினம் அடுத்தடுத்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென மயங்கி விழுந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், 14 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 38 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 250 அடி ஆழ ஆழ்துணை கிணற்றுக்குள் விஷம் கலந்திருப்பதாகவும், இந்த தண்ணீரை குடித்தவர்கள் உடம்பில் விஷம் கலந்து இறந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.