கேரள ஐஏஎஸ் அதிகாரியை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு அனுமதி

by Nishanth, Oct 29, 2020, 12:14 PM IST

திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தற்போது மிக முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் நேரடி தொடர்பு இருந்ததாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து கேரள முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் 100 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். ஒவ்வொரு முறை விசாரணைக்கு செல்லும்போதும் அப்போது சிவசங்கர் கைது செய்யப்படுவார் என பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்காததால் கைது நடவடிக்கை தாமதமானது.

இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சிவசங்கருக்கு எதிராக முக்கிய ஆதாரம் கிடைத்ததை தொடர்ந்து சுங்க இலாகா அதிகாரிகள் அவரை கைது செய்வதற்காக சென்றனர். ஆனால் அப்போது தனக்கு உடல் நலம் இல்லை என்று கூறி நாடகமாடி அவர் மருத்துவமனையில் சேர்ந்தார். மேலும் மருத்துவமனையில் இருந்தபடியே அவர் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 28ம் தேதி (நேற்று) வரை கைது செய்ய தடை விதித்தது. இதற்கிடையே மத்திய அமலாக்கத் துறையின் வழக்கிலும் 28ம் தேதி வரை சிவசங்கரை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் நேற்று சிவசங்கரின் 2 முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் அவரை கைது செய்ய அனுமதியளித்தது. இந்த தீர்ப்பு வந்த ஒரு சில நிமிடங்களிலேயே திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவசங்கரை மத்திய அமலாக்கத் துறை கஸ்டடியில் எடுத்தது. பின்னர் உடனடியாக அவரை கொச்சிக்கு அழைத்து சென்ற அதிகாரிகள் நேற்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை விசாரணை நடத்தினர். இதன் பின்னர் அவரை கைது செய்துள்ளதாக மத்திய அமலாக்கத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இன்று காலை மத்திய அமலாக்கத் துறையினர் சிவசங்கரை எர்ணாகுளம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது அவரை 14 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறை அனுமதி கேட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. தினமும் காலை 9 மணி முதல் 6 மணி வரை மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் அரை மணிநேரம் சிவசங்கருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்றும், உறவினர்களும், வழக்கறிஞர்களும் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து மத்திய அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்துவதற்காக அவரை கொண்டு சென்றனர். இந்த விசாரணையில் தங்க கடத்தல் வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் மாத இறுதியில் தான் துபாயிலிருந்து அமீரக தூதரகத்தின் பெயரில் தங்கம் அடங்கிய பார்சல் வந்தது. அப்போது சந்தேகத்தின் பேரில் திருவனந்தபுரம் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பார்சலை பிடித்து வைத்திருந்தனர்.

அப்போது கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஒரு முக்கிய அதிகாரி சுங்க இலாகா அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு அந்த பார்சலை விடுவிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்ததாக தகவல் வெளியானது. அந்த அதிகாரி யார் என்பது இன்று வரை மர்மமாக இருந்தது. இந்நிலையில் அந்த அதிகாரி சிவசங்கர் தான் என்று மத்திய அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. முதல்வர் அலுவலகத்திலிருந்து தங்க பார்சலை விடுவிக்க யாரும் போன் செய்யவில்லை என்று முதல்வர் பினராயி விஜயனும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சிவசங்கர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று கோரி காங்கிரஸ், பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் கேரளாவில் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளன.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை