பழனியில் நிலத்தகராறு காரணமாக துப்பாக்கி சூடு: இருவர் படுகாயம்

பழனியில் இடம் தகராறு தொடர்பாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயம் அடைந்தனர்.

by Balaji, Nov 16, 2020, 17:20 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் ( 70) இவருக்கு சொந்தமாக சினிமா தியேட்டர் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. இது தவிர இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 16 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை சத்திரப்பட்டி சேர்ந்த இளங்கோவன் என்பவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால் அந்த இடம் தனக்கு சொந்தமானது என தொழிலதிபர் நடராஜன் விவசாயி இளங்கோவனிடம் தகராறு செய்து வந்தார். இது தொடர்பாக நடராஜன் பழனி முனிசிபல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இளங்கோவனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனையடுத்து நடராஜன் திண்டுக்கல் சப் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் அதிலும் இளங்கோவனுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த கடந்த ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடராஜன் மேல் முறையீடு செய்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் இளங்கோவன் வீடு கட்டுவதற்காக பழநி நகராட்சியில் வரைபட அனுமதி வாங்கி வீடு கட்டும் பணியை துவங்கியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த நடராஜன் இன்று காலை அந்த இடத்திற்கு வந்தார் அங்கு நடந்து வரும் கட்டிடப் பணிகளை தடுத்து நிறுத்தி யதுடன் இளங்கோவன் மற்றும் அங்கிருந்த அவரது உறவினர்கள் பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணி ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி மூன்று தடவை சுட்டுள்ளார். இதில் சுப்பிரமணிக்கு மார்பிலும் பழனிச்சாமிக்கு வலது தொடையிலும் குண்டு பாய்ந்து இருவரும் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயக்கம் அடைந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பழனி நகர் காவல் நிலைய போலீசார் நடராஜனை கைது செய்தனர். அவர் வைத்திருந்த ரிவால்வரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடராஜன் அரசிடம் உரிய லைசன்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை