கோவை மண்டலத்தை சார்ந்த ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதி தமிழ்நாடு பேருந்து ஒன்று, தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்தாக இயக்கப்பட்டது. கரூரில் இருந்து திருச்சிக்கு இந்த பேருந்தை ஓட்டுநர் சரவணகுமார் என்பவர் இயக்கி வந்துள்ளார். இன்று(16-11-2020) மதியம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது அந்த பேருந்து. பயணிகளை இறக்கிவிட்ட பின், சிறப்பு பேருந்து என்பதால் அடுத்து எந்த தடத்தில் இயக்க வேண்டும் என்ற மேலதிகாரிகளின் ஆணைக்காக காத்திருந்த ஓட்டுநர் சரவணகுமார் மற்றும் நடத்துநர் ரவி ஆகியோர் இளைப்பாற அருகிலிருந்த தேநீர் கடைக்கு சென்றுள்ளனர்.
இந்த நேரத்தில் பேருந்தில் ஏறிய மது பிரியரான போதை ஆசாமி, பேருந்தில் ஆள் நடமாட்டம் இல்லாததை கண்டவுடன் குதுகளத்தில் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துள்ளார். பின்னர் போதையின் உச்சத்தில் இருந்தவர் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதனை கண்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் விரைந்து சென்று பேருந்தில் ஏறி மர்ம ஆசாமியை வலைத்து பிடித்தனர். பின்னர் அங்கு வந்த போலிசார் பேருந்தை இயக்கிய மர்மநபரை கண்டோன்மெண்ட் போலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த போதை ஆசாமியிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில் அவர் பெயர் "அஜித்" எனவும், கஞ்சா அடித்த போதையின் தாக்கத்தால் இவ்வாறு செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.