பிரேசிலில் உள்ள அமேசான் காடுகள் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே காட்டுத் தீயினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த ஒரு கோரமான காட்டுத்தீ விபத்தால், கிட்டத்தட்ட 2.3 மில்லியன் ஏக்கர்கள் கருகி சாம்பலாகி உள்ளன. காட்டில் உள்ள விலங்குகளும் கருகி அழிந்துள்ளது உலக நாடுகளை சோக மயமாக்கி உள்ளது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் அமேசான் காடுகளை பெரிய அளவு அழித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனை பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இன்பே தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், ஆகஸ்ட் 2019 முதல் 2020 ஜூலை வரை மொத்தம் 11,088 சதுர கி.மீ (4,281 சதுர மைல்) அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இது போன ஆண்டை விட 9.5% அதிகம். மேலும் 12 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு இது. அழிக்கப்பட்ட காடுகளின் அளவை எடுத்துக்கொண்டால் அது லண்டன் மாநகரைப் போல் 7 மடங்கு அதிகம். இந்த புள்ளிவிவரங்கள் முதல்கட்டம். அடுத்த வருட தொடக்கத்தில் முழு புள்ளிவிவரங்கள் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.