பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் தீக்குளித்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட பல கட்சியினர் கருப்பு சட்டை அணிந்தும், தங்களின் வீடு, அலுவலகங்களிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு அருகே உள்ள சித்தோடையை சேர்ந்த தர்மலிங்கம் (24) என்ற வாலிபர் இன்று அதிகாலை வீட்டில் இருந்த மண்ணென்ணை எடுத்து வந்து, பின்னர் அவரது வீட்டின் சுவற்றில் “மத்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர் நீர், எடப்பாடி திரு.பழனிசாமி நீங்கள் தமிழனா ? இல்லையா ? தமிழக மக்களிடம் துணிந்து சொல்லுங்கள் பார்க்கலாம்.
தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது” - பா.தர்மலிங்கம் என்று எழுதி வைத்துவிட்டு மண்ணெண்யை எடுத்து ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து தர்மலிங்கத்தை மீட்க முயன்றனர். அதற்குள் தீ உடல் முழுவதும் பரவி பலத்த தீக்காயம் அடைந்தார்.
பின்னர், தீயை அணைத்து தர்மலிங்கத்தை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, தர்மலிங்கம் நூறு சதவீதம் தீக்காயம் அடைந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.