ஐபிஎல் போட்டிகளை மையமாக கொண்டு உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 7ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை மையமாக வைத்து முக்கிய நகரங்களில் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்ற தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும், சூதாட்ட கும்பலை கைது செய்தும் வருகின்றனர்.
அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சிலர் ஐ.பி.எல். போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்பு அதிரடிப் படை போலீசார், சூதாட்டம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்து சூதாட்ட கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் ரொக்கப் பணமும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 40 செல்போன்கள் மற்றும் 3 லேப்டாப்கள், 2 எல்.இ.டி டிவி மற்றும் ஒரு பிரின்டரை பறிமுதல் செய்தனர்.
முக்கிய தலைநகரங்களில் பெரிய அணிகள் விளையாடும் போது மிக பெரிய அளவில் சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது என்றும், அதில் சென்னை நகரமும் அடங்கும் என்றும் சென்னையில் சூதாட்ட கும்பலை பிடிக்க போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.