நீட் தேர்வு எழுதுவதற்காக மகளை மதுரைக்கு அழைத்து சென்ற கண்ணன் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
நீட் தேர்வு இன்று காலை நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தை சேர்ந்த 1500 மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் அழைத்து சென்றார். மகனை தேர்வு அறையில் விட்டு வந்த கிருஷ்ணசாமி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இந்த துயர சம்பவம் மறைவதற்குள் மதுரையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ஐஸ்வர்யாவை மதுரையில் உள்ள தனியார் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத அழைத்து சென்றுள்ளார். தேர்வு எழுதி முடித்த மகளை வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் கண்ணனிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா அங்கிருந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, கண்ணனிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து முதலுதவி செய்யப்பட்டது. பின்னர், அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களின் தந்தை அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.