போபால்: மத்திய பிரதேசத்தில், கூட்டாக பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட 15 வயது சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசம், சாகர் மாவட்டத்தில் உள்ள தேவால் கிராமத்தை சேர்ந்த சிறுமி (15) 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த இளைஞர்கள் இரண்டு பேர் சிறுமியை பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.
சிறுமியின் அலறல் சத்தம கேட்டு ஓடிவந்த உறவினர்கள் சிறுமி தீக்கு இரையாகிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின், தீயை அணைத்து சிறுமியை உடனடியாக அங்குள்ள பண்டல்கண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிறுமி 80 சதவீத தீக்காயம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சிறுமி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “சிறுமியை பலாத்காரம் செய்த இருவரை அடையாளம் கண்டுள்ளோம். இரண்டு பேரும் அதே பகுதியை சேர்ந்த ராகவேந்திரா சென் மற்றும் ஷீப்யம் யாதவ் ஆவர். இதில், ஒருவரை கைது செய்துள்ளோம். மற்றொருவரை மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறோம்” என்றனர்.
மத்திய பிரதேச மாநில சட்டமன்றத்தில், கடந்த திங்கட்கிழமை 12 வயதிற்குட்பட்டவர்களை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இரண்டு சமபவங்கள் நிகழ்ந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை டெபுலூர், தெஹில் மாவட்டத்தின் சந்தர் கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.