திருப்பூர்: உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் சங்கர்(22). இன்ஜினியர் மாணவரான சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகள் கவுசல்யாவும்(19) கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் சங்கரும் கவுசல்யாவும் வீட்டிற்கு தெரியாமல் கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி கலப்பு திருமணம் செய்துக் கொண்டு உடுமலை பேருந்து நிலையத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு மோட்டார் பைக்கில் வந்த கும்பல் சங்கர் மற்றும் கவுசல்யாவை நடுரோட்டில் சரமாரியாக வெட்டியது. இதில், சங்கர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார். பலத்த காயத்துடன் உயிர் தப்பிய சவுசல்யா, சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
இந்த கொலை சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமன் பாண்டிதுரை மற்றும் செல்வகுமார், மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வானன், தன்ராஜ், பிரசாந்த், மணிகண்டன் என மொத்தம் 11 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி என பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மாமா பாண்டித்துரையை திருச்சி சிறையிலும் மற்ற 10 பேரை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர். மேலும், இந்த 11 பேர் மீதும் குண்டர் சட்டமும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அலமேலு நடராஜ் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஓராண்டாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று 12 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. முன்னதாக, இந்த கொலை வழக்கில் சிறையில் உள்ள கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி அலமேலு நடராஜ் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அதில், கவுசல்யாவின் தந்தை உள்பட 8 பேர் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. இதனால், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனை அளிக்குமாறு குற்றவாளிகள் சார்பில் நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இருப்பினும், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, நண்பர் ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வானன், மதன் ஆகிய ஆறு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. மேலும், ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தந்தை சின்னசாமிக்கு தண்டனையை தவிர ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, பிரசன்ன குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.