திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

Dec 14, 2017, 12:56 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலின் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும், அங்கு வந்த பக்தர்கள் சிலர் விபத்தில் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது.

அறுபடை முருகன் கோவிலில் இரண்டாம் படை வீடாக போற்றப்படுவது திருச்செந்தூர் முருகன் கோவில். இந்த கோவிலில் தரிசனம் செய்ய தினமும் பக்தர்களின் வருகை இருக்கும். தற்போது, கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் இன்று பாதையாத்திரையாக வந்து கோவிலின் பிரகார மண்டபங்களில் தங்கி இளைப்பாறியிருந்தனர்.

அப்போது, கோவிலின் நீண்ட பிரகாரத்தின் ஒரு பகுதி திடீரென இன்று காலை இடிந்து விழுந்தது. பிரகாரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பக்தர்கள் விபத்தின் உள்ளே சிக்கினர். இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். மேலும் எத்தனை பேர் விபத்தில் சிக்கி உள்ளனர் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. சிக்கி உள்ளவர்களை மீட்டும் பணியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்த, கோவில் நடை உடனடியாக அடைக்கப்பட்டது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில், இந்த கோர விபத்து பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில், வள்ளி குகை அருகே உள்ள பிரகார மண்டபம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை