கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பள்ளி சான்றிதழ் மூழ்கி நாசமானதால், விரக்தியடைந்த வாலிபர் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தில் என்றும் இல்லாத கனமழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் எதிரொலியாக, லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வசிப்பிடங்களைவிட்டு, வெளியேறி முகாம்களில் தங்கி வருகின்றனர்.
இதுபோன்று நிவாரண முகாம் ஒன்றில், கோழிக்கோடு மாவட்டம், கரந்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர் கைலாஷ் (19) தங்கி இருந்தார். இவர், ப்ளஸ் 2 முடித்து ஐடிஐ தொழில் பயிற்சியகத்தில் சேர்வதற்காக விண்ணப்பித்து, அதில் தேர்வும் ஆகி இருந்தார்.
இந்நிலையில், வீடு அமைந்துள்ள இடத்தில் ஓரளவுக்கு தண்ணீர் வடிந்ததால் அங்கு சென்ற கைலாஷ், தனது பள்ளி இறுதி சான்றிதழ் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால், மனவேதனை கொண்ட கைலாஷ் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இதுபற்றி அறியாத அவரது பெற்றோர், கைலாஷை காணவில்லை என்று தேடி வந்தனர். அப்போது, அவர்களது வீட்டிற்கு சென்று தேடிய நிலையில், கைலாஷ் இறந்துக்கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில், வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.