சென்னை சிட்லபாக்கம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தி.மு.க தொடர்ந்த வழக்கில், விசாரணை சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, பல்வேறு கடும் சட்டங்களை மீறி தமிழகத்தில் குட்கா விற்பனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இன்றைய தினம் சென்னை சிட்லபாக்கம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை நீலங்கரை பகுதியில் கைதான குட்கா விற்பனையாளர் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையில் குடோனில் சோதனையிட்டுள்ளனர். விசாரணையில், கைதான 2 பேர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கடந்த 6 ஆண்டுகளாக தண்ணீர் கேன் போடும் தொழிலை செய்ததும் தெரியவந்தது. அதே வாகனத்தில் குட்காவை மறைத்து வைத்து விற்பனை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.