மஹாராஷ்டிர மாநில ஔரங்கபாத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் போடப்பட்ட பதிவினால் கோபமடைந்த கும்பல் ஒன்று ஒருவரை வெட்டிக் கொன்றது.
ஔரங்கபாத் நகரை சேர்ந்தவர் மொயின் மெஹ்மூத் பதான் (வயது 35). ரியல் எஸ்டேட் தரகு வேலை செய்து வந்தார். ஹர்சூல் பகுதியிலுள்ள ஃபாத்திமா நகரில் வசித்து வந்த இவர் ஒரு கும்பலை சேர்ந்தவர். அதே நகரில் உள்ள இன்னொரு கும்பலுக்கும் இவருக்கும் பகை இருந்து வந்தது.
ஞாயிற்றுக்கிழமை மாலை பதான், எதிர் கும்பலுக்கு வாட்ஸ் அப் குரூப் மூலம் சவால் விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து கோபமடைந்த அந்தக் கும்பலை சேர்ந்த 20 பேர், மொயின் மெஹ்மூத் பதான் இருக்கும் இடத்துக்கு வந்தனர். வாள், கத்தி மற்றும் கம்பி போன்ற கொடூர ஆயுதங்களை கொண்டு அந்தக் கும்பல் பதானை தாக்கியுள்ளது. பதானின் உறவினர் ஷெய்க் ரஹிம் அந்தக் கும்பலிடமிருந்து மொயின் மெஹ்மூத்தை காப்பாற்ற முயன்றுள்ளார். கும்பல் தாக்கியதில் ஷெய்க் ரஹிமுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
தாக்கப்பட்ட மொயின் மெஹ்மூத்தை அருகிலிருந்த அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கொன்று சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலில் தொடர்புடையதாக ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.