ஒடிசா மாநிலத்தில் 60 வயது முதியவரை 'சுந்தரி' கொன்றதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
ஒடிசா மாநிலத்தில் அங்குல் மாவட்டத்தில் உள்ள சட்கோஸியா வனஉயிர் சரணாலயம் உள்ளது. அக்டோபர் 21ம் தேதி ஞாயிறு அன்று அங்குள்ள சுந்தரி என்ற பெண்புலி திரிநாத் சாஹு என்ற அறுபது வயது முதியவரை தாக்கி கொன்றுள்ளது. சரணாலயத்திற்கு அருகிலுள்ள டாய்ன்ஸி என்ற கிராமத்தை சேர்ந்த திரிநாத், மீன் பிடிக்கச் சென்றிருந்தபோது புலி அவரை கொடூர தாக்கி கொலை செய்துள்ளது.
மத்திய பிரதேசத்திலுள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவிலிருந்து கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி, சுந்தரி இந்த சரணாலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு, ஆகஸ்ட் 18ம் தேதி முதல் சரணாலயத்தின் அடர்ந்த பகுதிக்குள் விடப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி ஹாட்டிபரி கிராமத்தை சேர்ந்த கைலாஷி சாய் என்ற பெண்ணையும் இதே பெண் புலி கொன்றுள்ளது.
புலியால் கொல்லப்பட்ட நிகழ்வை உறுதிப்படுத்துவதற்காக டாய்ன்ஸி கிராமத்திற்குச் சென்ற உதவி வன பாதுகாப்பு அதிகாரியான ஸ்ரீகாந்த் பெஹ்ராவை கிராமத்தினர் கண்மூடித்தனமாக தாக்கி சிறைப்பிடித்து வைத்து பின்னர் விடுவித்துள்ளனர். சுந்தரியை சட்கோஸியா வனஉயிர் சரணாலயத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்று கிராமத்தினர் போராட்டம் செய்தனர். தேசிய நெடுஞ்சாலை எண் 55ல் தடைகளை போட்டு மறியல் செய்த அவர்கள், காவல்துறை வாகனம் ஒன்றை தாக்கியுள்ளனர்; மற்றொரு வாகனத்திற்கு நெருப்பு வைத்துள்ளனர். காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர்.
மயக்கமருந்து குழு சட்கோஸியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும், இறந்தவரின் குடும்பத்துக்கு நான்கு லட்ச ரூபாய் உதவி தொகை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வனஉயிர் மற்று காடுகள் தலைமை பாதுகாப்பு அதிகாரி சந்தீப் திரிபாதி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.