இளைஞர் முகாம் தீ விபத்தில் சிக்கி 3 மாணவிகள் பலி: குஜராத்தில் பரபரப்பு

Jan 13, 2018, 17:45 PM IST

காந்திநகர்: பிரான்சலா மாவட்டத்தில், இளைஞர்களுக்கான சிறப்பு முகாமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 3 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் பிரான்சலா மாவட்டத்தில் வேதிக் மிஷன் அறக்கட்டளை சார்பில், ராஷ்டிரிய கதாஷிபிர் என்ற சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
தேசிய ஒருங்கிணைப்பு, சமூக நல்லிணக்கம் மற்றும் தற்காப்பு கலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளி மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட, இந்த முகாமிற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துக் கொண்டார்.

இந்நிலையில், நேற்று இரவு இந்த முகாமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சுமார் 15க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.

அதற்குள் தீ மளமளவென பரவியது. தீயில் சிக்கிக்கொண்ட மாணவிகள் பலரை வீரர்கள் மீட்டனர். இருப்பினும், 3 மாணவிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Crime News


அண்மைய செய்திகள்