உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் வெளியிட்டார். 6 வேட்பாளர் பட்டியலில் அகிலேஷ் யாதவின் தந்தையும், தற்போதைய எம்பியுமான முலாயம் சிங் பெயரும் இடம் பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி கட்சி போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் 38 இடங்களிலும், சமாஜ் வாதி 37 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. உ.பி.யில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி முந்திக் கொண்டு நேற்று 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று 6 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இந்தப் பட்டியலில் அகிலேஷ் யாதவின் தந்தையும் தற்போதைய எம்.பி.யுமான முலாயம் சிங் யாதவுக்கு மெயின் புரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அசாம்கர் தொகுதி எம்.பியாக உள்ள முலாயம் தொகுதி மாறி போட்டியிடுகிறார். மக்களவையின் கடைசி நாளில் பேசிய முலாயம் சிங், பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என விருப்பம் தெரிவித்தது சர்ச்சையான நிலையில் மீண்டும் அவருக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் வர்மாவின் மகனும் தற்போதைய எம்பியுமான அக்சய் யாதவ் பெரோஷாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு அகிலேஷ் யாதவுடன் மோதல் ஏற்பட்டு தனிக் கட்சி தொடங்கிய அவருடைய சித்தப்பா ஷிவ்பால் யாதவ் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிட்டது.