ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!

by Madhavan, May 5, 2021, 12:36 PM IST

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது.

இந்நிலையில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்க இருக்ககிறது. இது தொடர்பாக அண்ணை அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சராக) மு.க.ஸ்டாலினை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். அப்போது அரங்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தி.மு.க. சட்டமன்ற தலைவராக (முதல்-அமைச்சராக) மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தில் 133 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்று இருந்தனர்.



அங்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர் சட்டமன்ற கட்சி தலைவராக எம்.எல்.ஏ.க் களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார்.

ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். இதை கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக்கொண்டார்.இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித், மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து வழங்கினார். ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக கூறினார். பின்னர் அங்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் கவர்னர் தேனீர் வழங்கினார்.

நாளை மறுநாள் 7-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்க விரும்புவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கிண்டி கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

அமைச்சரவை பட்டியலை நாளை மு.க.ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அங்கு சுமார் 200 பேர் அமரும் வகையில் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் எளிமையான முறையில் நடைபெறுகிறது.


You'r reading ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை