ராமர் கோயிலை முன்வைத்து அரசியலில் கிடு கிடு முன்னேற்றம் கண்ட பாஜக, இந்தத் தேர்தலிலும் மறுபடியும் ராமர் கோஷத்துடன் களம் காணத் தயாராகி விட்டது. தேர்தல் அறிக்கையில் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவோம் என்று முன்னுரிமை கொடுத்து உறுதியளித்துள்ளது.
இதோ அதோ என்று இழுத்தடிக்கப்பட்டு வந்த பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியடப்பட்டது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை முடிவடைய உள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில், அக்கட்சியின் தலைவர் அமித் ஷா இன்று வெளியிட்டார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு தயாரித்த இந்த தேர்தல் அறிக்கை, சங்கல்ப் பத்ரா என்ற பெயரில் வெளியிடப்பட்டது. 45 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில் 75 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில், உலக நாடுகளின் கவனத்தை இந்தியா பக்கம் திரும்பச் செய்யுமளவுக்கு மோடி அரசு சாதனை படைத்துள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழப் போகிறது என்று தேர்தல் அறிக்கையில் பெருமையாக கூறப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற பிரதான வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு ரூ 1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். 25 லட்சம் கோடி ரூபாயில் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு, முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வரப்படும்.தீவிரவாதத்துக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும் என்பது உள்ளிட்ட 75 வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி கூறியிருந்த நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நீட் குறித்த எந்த வார்த்தையும் இடம் பெறவில்லை. பாஜகவின் தேர்தல் அறிக்கையை அமித் ஷா வெளியிட, அறிக்கையின் முக்கிய அம்சங்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விவரித்துக் கூறினார்.