52 வருட அரசியல் அனுபவத்தில் மோடி போன்ற மோசமான பிரதமரை இதற்கு முன் பார்த்ததில்லை என்று மூத்த அரசியல்வாதியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வேதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரசும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து பாஜக - சிவசேனா கூட்டணியுடன் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடர்ச்சியாக மக்களவைத் தேர்தலில் தனது பாரமதி தொகுதியில் வென்று வந்த சரத் பவார் இம்முறை வயதைக் காரணம் காட்டி தேர்தலில் நிற்கவில்லை. ஆனாலும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.
பிரச்சாரத்தின் இடையே தற்போதைய மக்களவைத் தேர்தல் குறித்து நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் கடும் விமர்சனங்களை வைத்ததுடன், வேதனைகளையும் பகிர்ந்துள்ளார். இந்தத் தேர்தலில் பணபலத்தால் மட்டுமே வென்று விடலாம் என பாஜக நம்புகிறது. அதே பணபலத்தால் எதிர்க்கட்சிகளுக்கு தடைகளையும் ஏற்படுத்துகிறது.
இதற்கு பக்கபலமாக தன்னாட்சி அதிகாரம் படைத்த முக்கிய அமைப்புகளையும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட வைக்கிறது. எதிர்க் கட்சியினரின் அன்றாட பிரச்சார செலவுகளுக்குக் கூட வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை. வங்கி அதிகாரிகள் கூட தேவை யில்லாத கேள்விகளைக் கேட்டு தொந்தரவு செய்கின்றனர்.
மேலும் இந்தத் தேர்தலில் தான் பிரதமரே தனி நபர்கள் மீதான தாக்குதல்களையும், விமர்சனங்களையும் பிரச்சாரத்தின் போது அதிகம் முன்வைப்பது வேதனை அளிக்கிறது. நேரு குடும்பத்தினர் மீது மட்டுமின்றி தம்மை எதிர்க்கும் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் சரமாரியாக தனிநபர் தாக்குதல் கொடுக்கிறார் மோடி.என் குடும்பத்து உறுப்பினர்களையே எனக்கு எதிராக தூண்டிவிட மோடி சூழ்ச்சி செய்கிறார்.
சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நேரு முதல் இந்திரா, மொரார்ஜி, வி.பி. சிங், ராஜீவ், வாஜ்பாய் என அத்தனை பிரதமர்களும் அரசியல் நாகரீகத்தையும், நேர்மையையும் கடைப்பிடித்தனர். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு நாகரீகமாகவே உரிய பதில் தருவதை வாடிக்கையாகக் கொண்டு ஜனநாயகத்தை காப்பாற்றினர்.
ஆனால் என்னுடைய 52 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் தனிநபர் தாக்குதல் நடத்தும் பிரதமராக மோடி ஒருவரையே காண்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தனிநபர் தாக்குதல் தொடுப்பது பிரதமர் பதவிக்கு அழகல்ல என்று சரத் பவார் வேதனை தெரிவித்துள்ளார்.