மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை முடித்தவுடன் 2 நாள் ஆன்மீகப் பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி, கேதார்நாத் பனிக்குகையில் 18 மணி நேரம் தன்னந்தனியே அமர்ந்து தியானம் செய்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி கடந்த 4 மாத காலமாக நாடும் முழுவதும் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழா, அடிக்கல் நாட்டு விழா என சுற்றி வந்தார். அதன் பின் தேர்தல் பிரச்சாரத்தில் சுறுசுறுப்பானார். தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நாளில் சற்று ஒய்வெடுக்கப் போகிறேன் என்றவர், 2 நாள் ஆன்மீக பயணமாக நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு பயணமானார். கேதார்நாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்திய மோடி, அங்குள்ள பனிக்குகை ஒன்றில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார்.நேற்று பிற்பகல் தொடங்கி இரவு முழுவதும் தியானத்தை தொடர்ந்த மோடி, 18 மணி நேரத்திற்குப் பின் இன்று காலை தியானத்தை முடித்தார். மீண்டும் கேதார்நாத் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்த மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கேதார்நாத்தில் வழிபட்டதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். கேதார் நாத்துக்கும் எனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது. கொடுப்பதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம். எதையும் எடுப்பதற்காக நாம் படைக்கப்படவில்லை என்று தத்துவ வார்த்தைகளை உதித்த பிரதமர் மோடி, இன்று பத்ரிநாத் ஆலயத்தில் வழிபாடு நடத்துகிறார்.