ஆஸ்துமாவை குணப்படுத்த சிறுத்தை இறைச்சி விற்பனை செய்து வந்த 3 பேர் கொழும்பில் பிடிபட்டனர். ஆஸ்துமாவுக்கு பல மருந்துகள் சந்தையில் உள்ளன. ஆனால் இவை எதுவுமே இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்தாது. ஆஸ்துமா நோயின் கொடுமை அது வந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால் இந்த கொடிய நோயை குணப்படுத்துவதற்காக எந்த மருந்து கிடைத்தாலும் அதை பயன்படுத்த ஆஸ்துமா நோயாளிகள் தயாராக இருப்பார்கள்.
ஆந்திராவில் ஆஸ்துமா நோயைக் குணப்படுத்துவதற்காக மீன் சிகிச்சை அளிப்பது குறித்த தகவலை பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். அங்கு சென்றால் உயிருடன் உள்ள சிறிய மீனுக்குள் மருந்தை வைத்து அதை வாய்க்குள் விடுவார்கள். அந்த மீனை அப்படியே விழுங்கி விட வேண்டும். இதில் ஆஸ்துமா குணமாவதாக பரவலாக கூறப்பட்டது. ஆனால் இந்த மீன் சிகிச்சையில் பின்னர் சில சர்ச்சைகளும் ஏற்பட்டன.
இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் 3 பேர் ஆஸ்துமாவை குணப்படுத்துவதாக கூறி ரகசியமாக சிறுத்தை இறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து கொழும்பு வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் அந்த 3 பேரும் சிக்கினர்.
அவர்களது வீடுகளில் இருந்து 17 கிலோ சிறுத்தை இறைச்சியும் கைப்பற்றப்பட்டது. இவர்கள் காட்டில் பொறிவைத்து சிறுத்தையை பிடித்து அதன் இறைச்சியை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இக்கும்பல் இதுவரை ஏராளமான சிறுத்தைகளை கொன்று இதேபோல இறைச்சியை விற்பனை செய்து வந்ததாக வனத்துறையினர் கூறினர்.