பீகாரில் தலித் இளம்பெண்ணை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து 5 வயது குழந்தையுடன் அவரை கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் 19 வயது இளம்பெண் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கொடூரமான சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு இந்தியாவில் இன்னும் அடங்கவில்லை. அதன் பிறகும் உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பீகார் உட்பட பல்வேறு மாநிலங்களில் பலாத்கார சம்பவங்களில் எந்த குறைவும் இல்லை. கடந்த 2019ல் இந்தியாவில் தினமும் 87 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதே ஆண்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக நாடு முழுவதும் 4,05, 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2018ஐ விட கடந்த வருடம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடமும் பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று பீகாரில் மேலும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள பக்சர் என்ற பகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த 26 வயதான ஒரு இளம் பெண்ணை அவரது 5 வயது குழந்தையுடன் 7 பேர் கொண்ட ஒரு கும்பல் கடத்தி சென்று பலாத்காரம் செய்தது. இதன் பின்னர் அந்த இளம்பெண்ணை குழந்தையுடன் சேர்த்து அங்குள்ள வாய்க்காலில் வீசிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
இது குறித்து அறிந்த பக்சர் போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் குழந்தை பரிதாபமாக இறந்தது. அந்த இளம்பெண்ணை போலீசார் அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பக்சர் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற 6 பேரையும் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அனைவரையும் விரைவில் கைது செய்துவிடுவோம் என்று பக்சார் போலீஸ் அதிகாரி கே கே சிங் கூறினார்.