அசாமில் பிரியங்கா காந்தி ஓடி, ஓடி பிரச்சாரம் மேற்கொண்டார். தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்து தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினார்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்க மாநிலங்களில் ஏப்ரல் மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அசாமில் மொத்தம் 126 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அசாமில் தற்போது முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜக போராடுகிறது. ஏற்கனவே, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக அம்மாநில மக்கள், மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடி வந்தனர். அந்தப் பிரச்னை தேர்தலில் முக்கிய பிரச்னையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் ராகுல்காந்தியும், அசாமில் பிரியங்கா காந்தியும் காங்கிரசுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
ராகுல்காந்தி நடைபாதைக் கடையில் டீ குடிப்பது, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுவது, கடலில் குதித்து மீனவர்களுடன் மீன்பிடிப்பது போன்ற பல்வேறு வகையான காட்சிகளை அரங்கேற்றி பிரச்சாரம் செய்து வருகிறார். அதே போல், அசாமில் பிரியங்கா காந்தியும் பல்வேறு புதுமைகளுடன் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று(மார்ச்2) அவர் தேஷ்பூர், ஜுமர் போன்ற இடங்களில் பிரச்சாரம் செய்தார். ஜுமரில் தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்த அவர் அங்கிருந்த பெண் தேயிலைத் தொழிலாளியிடம் கூடையை வாங்கி, தானும் தேயிலை பறித்தார். அவர்களின் பிரச்னைகளை கேட்டு தெரிந்து கொண்டு வாக்கு கேட்டார். தேஷ்பூரில் சாலையின் இருபுறமும் இருந்த தொண்டர்களிடம் பேசி விட்டு, மாலையில் பொதுக் கூட்டத்திற்கு வந்தார். மாலை 4 மணிக்கு வர வேண்டியவர் 5 மணியாகி விட்டதால், காரை விட்டு இறங்கி ஓட்டமும் நடையுமாக பொதுக் கூட்ட மேடைக்குச் சென்றார்.
அவர் ஓடுவதைப் பார்த்ததும் மக்கள் உற்சாகமாக குரல் எழுப்பி அவரை பார்த்து கையசைத்தனர். அவரும் கைகூப்பி வணக்கம் செலுத்தியவாறே ஓடிச் சென்றார். பிரியங்கா காந்தி பேசும் போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், டெல்லியில் பிரதமர் வசிக்கும் இடத்தில் இருந்து நான்கைந்து கி.மீ. தூரத்தில் 3 லட்சம் விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை சந்தித்து ஒரு வார்த்தை பேசுவதற்கு மோடிக்கு மனமில்லை. அவர்களை சந்திப்பதில் பிரதமருக்கு என்ன பிரச்னை? பணக்காரர்களுக்கும், அதிகாரம் படைத்தவர்களுக்குமாகவே மோடி ஆட்சி செய்கிறார். மக்களுக்காக அவர் ஆட்சி புரியவில்லைஎன்று கடுமையாக சாடினார். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் அவர் பேசினார்.