மனைவியை சக வழக்குரைஞர்கள் முன்னிலையில் வெட்டிக்கொல்ல முயன்ற மும்பை வழக்குரைஞருக்கு நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.
மும்பை பிவாண்டி நகரத்தை சேர்ந்தவர் அகமது ஆசிப் ஃபக்கிவ். இவருக்கு 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையில் கணவர் தன்னை அடிப்பதாகக் கூறி, அவர் மனைவி பிள்ளைகளுடன் தனியாக வசிக்கக் தொடங்கினார். கணவர் அகமது மீது வரதட்சணை தொல்லை வழக்கும் தொடுத்தார். அகமது பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி வழக்குத் தொடுத்திருந்தார்.
கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி, மனைவி, அகமதுவுக்காக ஆஜராகும் வழக்குரைஞரின் அலுவலகத்தில் வழக்குக் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த அகமது துப்பாக்கியால் மனைவியை சுட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது துப்பாக்கி வேலை செய்யாததால், பட்டா கத்தியால் வழக்குரைஞர்கள் கண் முன்னே மனைவியை பல இடங்களில் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
அங்கிருந்த வழக்குரைஞர்கள் காயம்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சைக்குப் பின் அவர் குணமடைந்துள்ளார். பொய்வாடா போலீசார் அகமது மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் தானே மாவட்ட கூடுதல் செஷன் கோர்ட் அகமது ஆசிப் ஃபக்கிவ்வுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அகமதுவுக்கு எதிராக ஜாமீனில் வர இயலாத பிடிவராண்டையும் நீதிபதி பிறப்பித்துள்ளார்.