இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, உலக அளவில் இந்தியா முதலிடத்தை வகிக்கிறது. சில நாட்கள் முன் இந்தியா முழுவதும் 2.75 லட்சம் அளவு கொரோனா பாதிப்பு பதிவானது. கொரோனா தொடங்கியதில் இருந்து இது ஒருநாள் அதிகபட்சமாகும்.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. தடுப்பூசிகளை போடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இந்நிலையில், இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார் என மத்திய அரசு தகவல் சொல்லியது. அதன்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ``நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன். தற்போதைய கொரோனா பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டுவர முடியும். ஆக்சிஜன் தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும். கொரோனா 2-வது அலையால் மீண்டும் நாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம்.
கொரோனாவுக்கு எதிராக இந்தியா மிகப்பெரிய போரினை எதிர்கொண்டு வருகிறது. இரண்டாவது அலை ஒரு புயலை போல வீசி வருகிறது. நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கான தேவை பரவலாக அதிகரித்துள்ளது. இப்பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மக்களின் வலியை புரிந்துகொள்கிறேன். அனைவரும் தைரியத்துடன் போராட வேண்டும். அவசியமற்ற பணிகளுக்கு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
நாம் கட்டுப்படுவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்துள்ளோம். போர்க்கள அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும்" என்று கூறியிருக்கிறார்.