கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் இன்று முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
கர்நாடகத்தில் கொரோனா 2 வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அண்மை நிலவரப்படி தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் தலைநகர் பெங்களூருவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே பெருநகரங்களில் பெங்களூரு தான் வைரஸ் பாதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. பெங்களூருவில் மட்டும் 1.5 லட்சம் பேர் உள்ளனர். புதிதாக வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டதாக முதலமைச்சர் எடியூரப்பாவே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் இன்று முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு இன்று இரவு 9 மணி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் 14 நாட்கள் அமலில் இருக்கும்.
இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள், பால், இறைச்சி விற்பனை கடைகளுக்கு அனுமதி உண்டு. இந்த கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.