திருப்பதி கோயில் சொத்து விவரம்... ரோஜா வேண்டுகோள்

தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேவஸ்தானத்தின் நிதியை செலவு செய்து வருகின்றனர்

Aug 1, 2018, 23:34 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்கள், நகைகள், நில விவரங்களை உடனடியாக ஆன்லைனில் பக்தர்கள் பார்க்கும் விதமாக வைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ரோஜா வலியுறுத்தியுள்ளார்.

Actress Roja

நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் பேசிய அவர், “ஏழுமலையான் கோவிலில் பல ஆண்டுகளாக தலைமை அர்ச்சகராக இருந்த ரமண தீட்ஷித்தலு மற்றும் வம்ச பாரம்பரிய அர்ச்சகர்களை கட்டாய ஓய்வு வழங்கியிருப்பது அவர்களை அவமானப்படுத்தும் செயல்.

ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக இருந்தபோது அர்ச்சகர்களுக்கு கௌரவமும் மரியாதையும் வழங்கி வந்தார். ஆனால் சந்திரபாபு நாயுடு நாத்திகரை போல ஆயிரங்கால் மண்டபத்தை அவர் ஆட்சிக் காலத்தில் இடித்து தரைமட்டமாக்கினர்." என ரோஜா குற்றம்சாட்டினார்.

“வெங்கடேஸ்வர சுவாமிக்கு நாள்தோறும் பூஜை செய்யும் அர்ச்சகர்களை பக்தர்கள் கடவுளுக்கு அடுத்தப்படியாக பார்கின்றனர்.அவர்களை வீட்டுக்கு அனுப்பியது என்னைப் போன்ற பக்தர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கக் கூடிய கும்பாபிஷேகத்திற்கு பக்தர்களை அனுமதிக்க முடியாது எனக் கூறப்பட்டது. கடந்த மாதம் திருப்பதி வந்தபோது பக்தர்களின் வேதனையை தெரிவித்து இருந்தேன். இதனை ஏற்று பக்தர்களை அனுமதிப்பதாக தெரிவித்துள்ளார் இது மகிழ்ச்சி அளிக்கிறது.

Thirumalai

பக்தர்களை அனுமதிக்க மாட்டோம் என்று முடிவு எடுத்த அறங்காவலர் குழு உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான நகைகள் மற்றும் சொத்துக்கள், நில விவரங்கள் குறித்து ஆன்லைனில் வைக்கப்படும் என இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு பதவி ஏற்ற போது தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் பதவி ஏற்று எட்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது நகைகள் காணாமல் போனதாகவும் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது நகைகளையும் சொத்துக்களையும் எவ்வளவு நிலங்கள் உள்ளது என்பதை கணக்கிட்டு பக்தர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக ஆன்லைனில் அனைவரும் காணும் விதமாக செய்ய வேண்டும்.

அப்போதுதான் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்க முடியாது என்பதால் அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேவஸ்தானத்தின் நிதியை செலவு செய்து வருகின்றனர். இவை அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

விஐபிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தேவஸ்தான நிர்வாகம் ஏழை, எளிய சாதாரண பக்தர்களுக்கு என்று வரும் போது ஆகம விதிகளை காண்பித்து சுவாமிக்கு பக்தர்களுக்கும் இடையே இடைவெளி ஏற்படுத்தி வருகின்றனர்.” என நடிகை ரோஜா வேதனை தெரிவித்தார்.

You'r reading திருப்பதி கோயில் சொத்து விவரம்... ரோஜா வேண்டுகோள் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை