பணத்திற்காக, வசதியாக இருக்கும் 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம் கொம்மலுறு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா. இவருக்கும், பிரகாசம் மாவட்டம் கித்தலூரை சேர்ந்த ஆனந்த் ரெட்டி என்பவரின் மகள் மோனிக்காவுக்கும் (30) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதன் பிறகு, சில மாதங்களுக்கு பிறகு மகளை வீட்டிற்கு அழைத்துக் செல்வதாக ராமகிருஷ்ணாவிடம் கூறிவிட்டு ஆனந்த் ரெட்டி புறப்பட்டுள்ளார்.
அதன் பிறகு, மோனிகா வீடு திரும்பவில்லை. இதனால், ராமகிருஷ்ணா மோனிகாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், ஆனந்த் ரெட்டி மற்றும் மோனிகா ஆகியோர் வீட்டை காலி செய்துவிட்டதாக தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணா இதுகுறித்து உடனடியாக போலீசில் தகவல் தெரிவித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் மோனிகா குறித்து விசாரணை நடத்தியதில், அவர் ஏற்கனவே நான்கு பேரை திருமணம் செய்துள்ளதாகவும், ஐந்தாவதாக ராமகிருஷ்ணாவை திருமணம் செய்துள்ளதாகவும் தெரியவந்தது.
பின்னர், மோனிகா ராமகிருஷ்ணாவை விட்டுவிட்டு ஐதராபாத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு விசாகபட்டினத்தில் வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.
இதையடுத்து, காஜிப்பேட்டை போலீசார் தேடுவை அறிந்த மோனிகா, முடிந்த வரையில் பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு விசாகப்பட்டினத்தில் இருந்து மீண்டும் ஐதராபாத்துக்கு வந்து அங்கு ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு வசித்து வந்துள்ளார்.
இதன்பிறகு, செல்போனை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார், ஐதராபாத்தில் வைத்து மோனிகாவை கைது செய்தனர். பின்னர் இதுகுறித்து மோனிகாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தனது தந்தை மற்றும் நிஜ காதலன் சண்டி நாயக் ஆகியோருக்கு உதவுவதற்காக வசதி படைத்த ஆண்களை குறிவைத்து ஆசைவார்த்தைகள் கூறி திருமணம் செய்தது தெரியவந்தது.
மோனிகா அளித்த தகவலைக் கொண்டு தலைமறைவாக இருந்த ஆனந்த் ரெட்டி மற்றும் சண்டி நாயக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பணத்திற்காக, இளம்பெண் ஏழு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.