நீங்கள் ஏன் முன்னேறவில்லை தெரியுமா?

6 habits that are holding you back from being rich and successful

by SAM ASIR, Apr 15, 2019, 18:34 PM IST
'எப்படி இருந்த ஆளு தெரியுமா அவன்?' - சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களை குறித்து பெரும்பாலும் இதுபோன்ற கருத்தினை கேட்கிறோம். ஏதோ ஒரு காலகட்டத்தில் சாதாரணமாக இருந்தவர்கள்தாம், பிற்காலங்களில் புகழ் ஏணியில் ஏறி உச்சம் தொடுகிறார்கள்.

புகழை மட்டுமல்லாமல் செல்வத்தையும் சேர்க்கிறவர்களை பார்த்து, நம் மனதிலும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற ஆவல் எட்டிப்பார்க்கிறதல்லவா!
சிலர், 'முன்னேற வேண்டும் என்று தீர்மானித்து எத்தனையோ ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் முன்னேற முடியவில்லை' என்று புலம்பிக் கொண்டிருப்பர். முன்னேற வேண்டும் என்று எண்ணியும் முன்னேற முடியாமல் போவதற்கு ஆறு காரணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். அவை என்ன தெரியுமா?
தன்னையே சந்தேகித்தல்

கனவுகள் நனவாவதை தடுப்பதில் தன்மேல் தானே நம்பிக்கை வைக்காததற்கு முக்கிய பங்கு உண்டு. 'நீ இதை செய்து விடுவாயா?' என்ற சுய ஐயப்பாடு, கனவுகளை கலைத்துவிடுகிறது. கனவை நனவாக்குவதற்கு முழுமூச்சான உழைப்பு அவசியம். உங்களையே சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். அப்போது எதிர்மறை எண்ணங்களை மேற்கொள்ள முடியும். சுய ஐயப்பாட்டை தவிர்த்துவிட்டு கனவு காணுங்கள். வானம் வசப்படும்.
 
ஏற்ற நேரத்துக்கு காத்திருத்தல்
 
'சரியான நேரம்' என்று ஒன்று கிடையாது. சிலர், முயற்சி செய்வதற்கு ஏற்ற நேரம் வருவதற்காக காத்திருப்பதாக கூறுவர். நேரத்திற்காக காத்திருந்து களைத்துப்போய் கனவுகளை கைவிட்டுவிடுபவர்கள் அநேகர். ஆகவே, செயல்படுவதற்கு ஏற்ற நேரம் என்று, இல்லாத ஒன்றுக்காக காத்திருந்து காலத்தை வீணாக்க வேண்டாம். குறிப்பிட்ட இந்த நேரத்தில் முயற்சியை தொடங்கினால் என்னென்ன தடைகள், விளைவுகளை எதிர்கொள்ளக்கூடும் என்பதை திட்டமாய் ஆராய்ந்து உடனடியாக முயற்சியை ஆரம்பிக்கலாம்.
 
புதியனவற்றை புறக்கணித்தல்
 
'கற்றுக்கொள்வது' ஒரு மனிதன் இந்த உலகில் வாழும் கடைசி நாள் வரைக்கும் தொடர வேண்டிய விஷயம். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும்.  புதிதாக அறிமுகமாகும் விஷயங்கள், தொழில்நுட்பங்களை பற்றிய புரிதலே முன்னேற்றத்தை துரிதப்படுத்தும்.
 
செயல்படுத்தாமல் இருத்தல்
 
சிலர் நன்றாக பேசுவர். ஆனால், செயலில் இறங்கமாட்டார்கள். திட்டங்கள் தீட்டுவது, அவற்றைப் பற்றி பேசுவது ஒரு பக்கம்! ஆனால், அவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்காவிட்டால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. சிந்தியுங்கள்; பேசுங்கள். ஆனால், வார்த்தைகளுக்கு வடிவம் கொடுப்பதில் உறுதியாய் இருங்கள். அப்போது உங்கள் வெற்றிப்பயணம் தொடங்கும்.
 
திட்டமிடப்படாத இலக்குகள்

முன்னேற்ற பாதையில் பயணிப்போர், தங்கள் எதிர்காலம் குறித்த திட்ட வரைபடத்தை மனதில் கொண்டிருப்பர். இத்தனை நாளுக்குப் பிறகு இந்த இடத்தில் இருக்க வேண்டும். இவை இவற்றை செய்யவேண்டும். இது முடிந்ததும் இதை ஆரம்பிக்க வேண்டும் என்ற தெளிவான வரையறைகளை வைத்திருப்பர். உங்கள் முழு வாழ்க்கையை குறித்த திட்டத்தை தெளிவாக வைத்திருப்பதே நீண்டகால பயணத்தில் நன்மை செய்யும்.
 
பொறுமையாக தொடராதிருத்தல்
 
முயற்சியை ஆரம்பித்த பிறகு உடனடியாக பலனை எதிர்பார்க்கக்கூடாது. நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்து முயற்சிக்கான பலன் கிடைப்பதில் கால வேறுபாடு இருக்கக்கூடும். ஆகவே, மனந்தளராமல் தொடர்ந்து உழைக்கவேண்டும். நீடிய பொறுமையோடு முயற்சியை தொடர்வோர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்.

You'r reading நீங்கள் ஏன் முன்னேறவில்லை தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை