மருத்துவ துறையைக் கார்ப்பரேட் மயமாக்கும் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சமீபத்தில் 1௦௦-க்கும் மேற்பட்ட திரைப்பட இயக்குநர்கள் ஒன்று கூடி, ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அவர்களைத் தொடர்ந்து எழுத்தாளர்களும் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி ஏந்தினர். அந்த வரிசையில், இன்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கமும் இணைந்துள்ளது.
சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர் ரவீந்த்ரநாத், பன்னாட்டு மருத்துவ காப்பீடு நிறுவனங்களும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும் பயன் அடையும் வகையில், பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்திய மருத்துவக் கழகத்தை ஒழித்து தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டுவர பஜாக முயற்சி செய்து வருகிறது என்றும், மருத்துவ கல்வியிலும் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து விட்டது' என்றவர்,
மருந்துகளின் விலையைக் குறைக்க வில்லை; பொது சுகாதாரத்தை வலுப்படுத்தவில்லை சாதாரண ஏழை எளிய மக்களுக்குத் துரோகம் செய்து விட்டது பாஜக அரசு, எனவே பாஜகவின் ஆட்சியை துரத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆகையால், தமிழக வாக்காளர்கள் வருகின்ற தேர்தலில் பஜாக தோற்கடிக்க வேண்டும் என்று கூறி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.