அலுவலகத்தில் கூடுதல் வேலைதிறன் யாருக்கு உள்ளதோ அவர்களே ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு இவற்றை பெறுகிறார்கள். எல்லோருமே மேலதிகாரியின் பாராட்டை பெறவே விரும்புவர். ஆனால், நிர்வாகம் அனைவரையும் அப்படி அங்கீகரிப்பதில்லை.
யாருக்குத் திறன் அதிகம்?
அலுவலகத்தில் முழு நேரமும் கணினி (கம்ப்யூட்டர்) முன்னரோ, மடிக்கணினி (லேப்டாப்) முன்னரோ கண்ணிமைக்கால் உட்கார்ந்திருப்பவரே நல்ல பணியாளரா? இந்தக் கேள்விக்கு விடை தேடி 'நேர கண்காணிப்பு மற்றும் வேலைதிறன்' செயலி (time-tracking and productivity app)ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. எட்டு மணி நேரமும் அசையாமல் இருக்கையிலேயே அமர்ந்திருப்பவர்களால் முழு திறனை வெளிப்படுத்த இயலவில்லை. நேரம் கடக்கும்போது செயல்திறன் குறைகிறது என்பதை அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
52க்கு 17 விதி
கணினி திரையை இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பது கண்களை சோர்வடையச் செய்கிறது. வேறு சிந்தனையே இல்லாமல் தொடர்ந்து வேலை செய்வது மனஅழுத்தத்தை அளிக்கிறது. ஆனால், 52க்கு 17 என்ற முறையில் பணியை செய்பவர்கள் செயல்திறன், பணிதிறன் மிக்கவர்களாக இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்தது. ஆகவே, சிறந்த வேலைதிறனை வெளிப்படுத்துவதற்கு இதையே விதியாக அந்த ஆராய்ச்சியாளர்கள் அறிவித்தனர். அதாவது 52 நிமிடங்கள் முழு கவனத்துடன், முழு படைப்பூக்கத்துடன் வேலையை செய்வது பிறகு 17 நிமிடம் இடைவேளை எடுத்துக்கொள்வது என்பதே அந்த முறையாகும்.
17 நிமிட இடைவேளை
17 நிமிட இடைவேளையில் இருக்கையில் அமர்ந்து சமூக வலைத்தளங்களை பார்த்துக்கொண்டிருப்பது, மின்னஞ்சல்களை வாசிப்பதுபோன்ற எந்த செயலையும் செய்யக்கூடாது. மாறாக, எழுந்து சிறிது நேரம் நடக்கலாம். வேலை தவிர்த்த வேறு ஏதாவது காரியங்களை நண்பர்களுடன் பேசலாம். ஆரோக்கியமான பண்டங்கள் எவற்றையாவது உண்ணலாம். அப்போது மனமும் உடலும் புத்துணர்வு பெறும். அப்போது வேலையிலுள்ள பிரச்னைகளை புதிதான கோணத்தில் பார்க்க இயலும். ஒரே இடத்தில் அமர்ந்து, கணினி திரையையோ பார்த்துக்கொண்டிருப்பது உடலுக்கு களைப்பையும் ஆரோக்கிய கேட்டையும் கொடுக்கும். வேலைக்கு நடுவே இடைவேளை எடுத்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
அலுவலகத்தில் உம்மென்று வேலை பார்ப்பவர்களைக் காட்டிலும் மற்றவர்களுடன் இணைந்து பழகுபவர்களின் பணிதிறன் கூடுதலாக வெளிப்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
17 நிமிட நேரம் இடைவேளை எடுத்துக்கொள்ள இயலாவிட்டாலும் குறைந்தது 10 நிமிடங்களாவது இடைவேளை எடுத்துக்கொண்டு, பணியிடத்தை விட்டு எழுந்து செல்வது பணிதிறனை அதிகரிக்கும். இடைவேளை எடுப்பதால் ஒருவேளை மற்றவர்களை விட மாலையில் நீங்கள் சற்றுநேரம் அலுவலகத்தில் இருக்கவேண்டியது நேரலாம். ஆனால், மற்றவர்களைக் காட்டிலும் உங்கள் வேலைதிறன் அதிகமாக, திறமையானவிதத்தில் வெளிப்படும். ஏற்ற நேரத்தில் உரிய ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு, பதவி உயர்வு வந்து சேரும்.