எலும்பினை பாதுகாக்கும் உணவு பொருள்கள்

Top 6 Vitamin-C Rich Foods

by SAM ASIR, Jun 4, 2019, 10:37 AM IST

எலும்புகளுக்கு பாதுகாப்பு, திசுக்களை கட்டமைக்க உதவி, உணவிலிருந்து இரும்பு சத்தினை உறிந்தெடுக்கும் காரணி, உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் வேதிவினைகளை தடுக்கும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களாகிய ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் கொண்டது என்று பல்வேறு விதங்களில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது வைட்டமின் 'சி' ஆகும்.

வைட்டமின் சி, நீரில் கரையக்கூடியது. ஆகவே உடலில் அதிக அளவில் தங்கியிருக்காது. நம் உடலால் அதை தயாரித்துக்கொள்ளவும் இயலாது. உடல் நீர்ச்சத்தினை இழக்காமல் இருக்கவும், போதிய அளவு நீரினை கொண்டிருக்கவும் வைட்டமின் 'சி'தான் உதவி செய்கிறது.

எல்-அஸ்கார்பிக் அமிலம் அல்லது அஸ்கார்பேட் என்றும் வைட்டமின் 'சி' அழைக்கப்படுகிறது. பெரியவர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 40 மில்லிகிராம் வைட்டமின் 'சி' சத்து தேவை. 1000 மில்லிகிராமுக்கு மேல் இதை உட்கொண்டால் உடல்நலக்கேடு உண்டாகும். வைட்டமின் 'சி' அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய பாதிப்புகள் வரக்கூடும்.

கப்பல் பணியாளர் நோய்: கடலில் அதிக நாள்கள் தங்கியிருப்பவர்களுக்கு வரக்கூடிய நோய் ஸ்கர்வி ஆகும். இது தற்போது அரிதானபோதிலும் ஆபத்துமிக்கதாகும். கடலில் தங்கியிருப்போரின் உடலில் வைட்டமின் 'சி' சத்து குறைவுபட வாய்ப்புள்ளது. வைட்டமின் 'சி' சத்து குறைவு ஸ்கர்வி நோயை கொண்டு வரும்.

சளித்தொல்லை: வைட்டமின் 'சி' உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக்கூடியது. சளித்தொல்லை வராமல் இது பாதுகாக்காது. ஆனால், ஜலதோஷம் என்னும் சாதாரண சளித்தொல்லை விரைவில் குணமாகவும், பாதிப்பு அதிகமாகாமலும் வைட்டமின் 'சி' உதவுகிறது.

உடலுக்குப் பாதுகாப்பு: உடலில் நடக்கும் சில வேதிவினைகள் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடியவை. கண்களையும் மற்ற உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய வேதிவினைகளை தடுக்கக்கூடிய ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் என்னும் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் வைட்டமின் 'சி' யில் காணப்படுகின்றன. இந்த ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் வேதிவினை சமநிலைப்படுத்தி உடல்நலத்தை காக்கின்றன.
இரும்புச் சத்து: நாம் எவ்வளவுதான் இரும்புச் சத்துகள் நிறைந்த உணவுகளை உண்டாலும் அச்சத்து உடலுக்குள் கிரகிக்கப்படவேண்டும். வைட்டமின் 'சி' சத்து நிறைந்த இரும்புச் சத்து உணவுகளை உண்டால், சிறுகுடலால் எளிதில் கிரகிக்கப்படக்கூடியதாக இரும்புச் சத்து மாற்றப்படும். வைட்டமின் 'சி' இப்பணியை செய்து இரும்புச் சத்தை உடல் எளிதாக உள்வாங்கிக் கொள்ள உதவுகிறது.

எலும்பு பாதுகாப்பு: வைட்டமின் 'சி' கொலாஜன் என்னும் ஒரு வகை புரதம் உருவாக உதவுகிறது. இந்த கொலாஜன், ஸ்கர்வி, பல் விழுதல் போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்தையும் எலும்புகளுக்கு உறுதியையும் அளிக்கிறது.
உணர்ச்சிகளின் உச்சம்: மூளையிலிருந்து கட்டளைகளை எடுத்துச் செல்கிற நியூரோடிரான்ஸ்மிட்டர் என்னும் நரம்பு செல்களின் இயக்கத்திற்கு வைட்டமின் 'சி' உதவுகிறது. சிந்தனைகள், உணர்ச்சிகள் ஆகியவை நரம்பு மண்டலத்தின் வழியாக எடுத்துச் செல்லப்பட இது உதவுகிறது.

சரும ஆரோக்கியம்: தழும்புகளை மறையவும், சவ்வுகள் புதிதாக உருவாகவும் வைட்டமின் 'சி' உதவுகிறது. வைட்டமின் 'சி'யிலிருந்து கிடைக்கும் துணைபொருளான அஸ்கார்பின் அமிலம் 2-பாஸ்பேட் மரபணு பாதிப்பை சரி செய்ய உதவுகிறது. வைட்டமின் 'சி' சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.

வைட்டமின் 'சி' காணப்படும் உணவுகள்:

நார்த்தங்காய், எலுமிச்சை, ஆரஞ்சு ஆகிய சிட்ரஸ் வகை பழங்கள், குடை மிளகாய், பிராக்கோலி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி ஆகிய காய் மற்றும் பழங்களில் வைட்டமின் 'சி' சத்து அதிகமாக காணப்படுகிறது. இவற்றை சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம்.

You'r reading எலும்பினை பாதுகாக்கும் உணவு பொருள்கள் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை