மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரம் 13 பேரின் கதி என்ன?

Teams Trek To Suspected Crash Site In Search For Missing Air Force Plane

by எஸ். எம். கணபதி, Jun 4, 2019, 10:32 AM IST

அசாமில் இருந்து புறப்பட்டு மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியில் விமானப்படையுடன், இந்திய ராணுவமும் இணைந்துள்ளது. எந்த பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகி விழுந்திருக்கலாம் என்று சில பகுதிகளை விமானப்படை அடையாளம் கண்டு தேடி வருகிறது.

அசாமில் உள்ள ஜோர்காட் தளத்தில் இருந்து, இந்திய விமானப்படை விமானம் 13 பேருடன் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மெச்சுகா என்ற இடத்திற்கு பகல் 12.25 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானக் குழுவினர் 8 பேரும், பயணிகள் 5 பேரும் விமானத்தில் சென்றனர். இந்த விமானம் பகல் 1 மணிக்கு பிறகு, கட்டுப்பாட்டு அறையின் ரேடார் வளையத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டது. அதன்பிறகு, விமானப் படையின் கட்டுப்பாட்டு அறை முயற்சித்தும் விமானத்தின் சிக்னல் கிடைக்கவே இல்லை. விமானம் எப்படி மாயமானது? அதிலிருந்த 13 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.

இதையடுத்து, விமானத்தை தேடும் பணி இரவு பகலாக தொடர்ந்து வருகிறது. இது குறித்து, இந்திய விமானப்படை தளபதி ஏர்மார்ஷல் ராஜேஷ்சிங்கிடம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டறிந்தார். தற்போது, விமானம் எந்தெந்த பகுதிகளில் விபத்துக்குள்ளாகி இருக்க வாய்ப்புள்ளது என்று சில இடங்களை அடையாளம் கண்டு விமானப்படை தேடி வருகிறது.

அருணாசலப் பிரதேசத்தில் வானிலை மோசமாக உள்ள நிலையிலும் விமானத்தை தேடும் பணி மும்முரமாக நடக்கிறது. இந்த பணியில் இந்திய ராணுவமும் இணைந்துள்ளது.
மாயமான விமானம் ஏஎன்32 என்ற ரகத்தைச் சேர்ந்தது. இந்த ரகம் ரஷ்யத் தயாரிப்பு விமானமாகும். இவை கடந்த 40 ஆண்டுகளாக விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டில் சென்னை விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு சென்ற இதே ரக விமானம் காணாமல் போனது. அந்த விமானத்தை நீண்ட காலமாக விமானப்படை தேடி வந்தது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகி வங்கக்கடலில் விழுந்திருக்கலாம் என்ற அடிப்படையில் கடலில் நீண்டநாட்களாக தேடப்பட்டது. கடைசியில் விமானத்தில் இருந்த 29 பேரும் இறந்து விட்டதாக கருதப்பட்டது.

You'r reading மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரம் 13 பேரின் கதி என்ன? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை