உலக அளவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 46% பாதிப்பு இந்தியாவில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
கொரோனாவில் இரண்டாம் அலை இந்தியாவில் பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்படும் தினசரி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.
இதனால், இந்தியாவில் இதுவரை மொத்த பாதிப்புகள் எண்ணிக்கை 2 கோடியை கடந்து விட்டது. உலக அளவில் கடந்த வாரம் 57 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் கடந்த வாரத்தில் 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு பலியாகினர்.
இந்தியாவில் இருமுறை உருமாறிய E484Q மற்றும் L452R, என்ற கொரோனா வைரஸின் வகை பெரிய அளவில் பரவி பீதியைக் கிளப்பி வருகிறது.இந்த நிலையில், உலக அளவில் ஏற்படும் புதிய பாதிப்புகளில் 46 சதவீதம் இந்தியாவில் மட்டும் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் 20 சதவீதம் தொற்று பாதிப்பு அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் வாராந்திர பெருந்தொற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகாரப்பூர்வ தகவல்களின் படி இந்த எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை பெருமளவில் பதிவாகமல் இருக்கக் கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் 42,000 பேருக்குத் தொற்று பாதித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்து 92 ஆயிரத்து 409 ஆக உள்ளது.