'அவனா? காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடுவானே!' என்று சிலரைப் பற்றி பேசக் கேட்கிறோம். 'பிஸியான மனுஷன்' என்று சிலரை குறிப்பிடுகிறோம். பரபரப்பாக இருப்பவர்கள், மற்றவர்களுக்கான வேலைகளையெல்லாம் செய்கிறார்களே தவிர, தங்களுக்காக எப்போதாவது நேரத்தை செலவிடுகிறார்களா என்று பார்த்தால், அநேகமாக 'இல்லை' என்பதே பதிலாக இருக்கும். உண்மையில் இவர்கள் நேரமில்லாமல்தான் இருக்கிறார்களா என்று பார்த்தால், அவர்களது மனப்பாங்கே அவர்களை நேர நெருக்கடிக்குள் தள்ளி விடுகிறது என்பது தெரிய வரும்.
மறுக்க இயலாத மனிதர்கள்
இது பரபரப்பான உலகம். சுயநலம் மிக்கது. ஆனால், சுயநலமே இல்லாமல் ஒருவர் இருந்தால் கெட்டுப்போவது அவரது உடல்நலம் மட்டுமல்ல. அவரைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினர் மற்றும்பணியாளர்களும்தாம். பல நேரங்களில் நமக்கு முக்கியமல்லாத, ஏன் தொடர்பே இல்லாத காரணங்களுக்காகக் கூட நாம் நேரத்தை செலவிடுகிறோம். ஒருமுறை செலவழிக்கப்பட்ட நேரம் திரும்ப கிடைக்காது. ஆகவே, நேர நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்கிறோம். 'பிஸியான மனுஷன்' என்ற அடையாளம் நம்மேல் திணிக்கப்படுகிறது. அதன்பின், நமக்கென்று தனிப்பட்ட நேரம் எதுவுமே கிடைப்பதில்லை.
'இதைச் செய்து தாருங்கள்' 'அதை கொஞ்சம் முடித்துக் கொடுங்கள்' 'ப்ளீஸ் எப்படியாவது ஹெல்ப் பண்ணுங்க' என்ற வகை கோரிக்கைகளாக இருந்தாலும், 'நீதான் செய்யணும்..' என்ற உரிமை குரலாக இருந்தாலும், முதலில் கேட்கப்படும் உதவி அல்லது செய்யப்படும்படியாக சொல்லப்படும் வேலை, நமக்குத் தொடர்புடையதா என்பதை யோசிக்க வேண்டும். மறுக்க முடியாததால் பலர் நேரநெருக்கடிக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.
மனஅழுத்தத்திற்குள் தள்ளும் எதிர்பார்ப்புகள்
'வாய் திறந்து கேட்டுவிட்டார். முடியாது என்று சொல்ல இயலாது,' என்று எல்லா வேலைகளையும் ஒப்புக்கொள்வோமானால், நமது கடமைகளைகூட சரியாக செய்ய இயலாது. முடிக்காமல் குவிந்து கிடக்கும் வேலைகள், மன அழுத்தத்தை தரும். தொடரும் நச்சரிப்பு, எதிர்ப்படும் தடைகள், விரயமாகும் நேரம் ஆகியவற்றால் மனம் பாரமாகும்.
மனஅழுத்தம் வரும்போது உடல்நலம் கெட்டுப்போகும்.
பல நேரங்களில் நம் மனதுக்கு பிடிக்காத வேலைகளைக்கூட மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டு செய்தாலும் மனஅழுத்தம் ஏற்படும். அதிலும் கவனம் அவசியம்.
ஆகவே, அலுவலகமானாலும், உற்றார் உறவினர் என்றாலும் எத்தனை வேலைகளை நம்மால் செய்ய இயலும்? அந்த வேலையின் நம் கவனம் செல்லுமா? அது நமக்குப் பிடித்ததா? என்று ஆராய்ந்து பின்னர் தீர்மானித்தே வேலைகளை ஒப்புக்கொள்ள வேண்டும். சரியானபடி திட்டமிடாமல் வேலைகளையோ உதவி செய்வதாகவோ ஒப்புக்கொண்டால், அந்த வேலையும் சரியாக முடியாது; மனஅழுத்தத்தால் உடல் ஆரோக்கியமும் குன்றும்.
'இல்லைங்க...' மென்மையாக ஆனால் உறுதியாக...!
நேர நெருக்கடியையும், மனஅழுத்தத்தையும் தவிர்க்க ஒரே வழி, 'இல்லை' என்று சொல்வதுதான்! நம் பண்பாடு யாரிடமும் எதையும் மறுக்காமல் இருப்பதே. அதற்காக எல்லாவற்றையும் தலைமேல் தூக்கி வைத்துக்கொள்வது பிரச்னையை கொண்டு வரும். மற்றவர்கள் மனம் காயப்பட்டுவிடும் என்பதற்காக முடியாதவற்றையும், பிடிக்காதவற்றையும் ஒத்துக்கொண்டோமனால், நம்மை நாமே காயப்படுத்தவேண்டியது வரும்.
'இல்லை... முடியாது' என்பவற்றை முகத்தில் அடித்தாற்போல் சொல்லவேண்டியதில்லை. 'இல்லை' என்பதை எப்படி சொல்வது என்பதே ஒரு கலைதான். மென்மையாக 'இல்லை' என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். உதவி கேட்பவர்களை முகத்திற்கு நேரே மறுக்க முடியாத நிலை இருந்தால், விவரங்களை மின்னஞ்சல் செய்யவோ, வாட்ஸ்அப் செய்யவோ கூறுங்கள். சற்று நேரம் எடுத்து நிதானமாக யோசித்துவிட்டு, பின்னர் பதில் மின்னஞ்சலில் அல்லது வாட்ஸ்அப்பில் 'முடியாது' என்பதை தெரிவிக்கலாம்.
எல்லாவற்றையும் மறுக்கவேண்டும் என்ற கூறவில்லை; மாறாக, மறுக்கவேண்டியவற்றையும் ஏற்றுக்கொள்வது நம் கடமைகளையும் உடல்நலத்தையும் கூட கெடுத்துவிடும்.