வேலைக்குச் செல்லும் பெண்களை வாட்டும் நோய்கள்

Womens lifestyle choices that give way to illnesses

by SAM ASIR, Jun 21, 2019, 15:13 PM IST

ஆண்களுக்கு சரிநிகர் சமானமாய் பெண்களும் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். சுயகாலில் நிற்பது என்பது ஒருபக்கம்; இருவர் சம்பாதித்தால்தான் குடும்பத்தை நடத்தமுடியும் என்ற பொருளாதார கட்டாயம் ஒருபக்கம் என்று பெண்கள் வேலைக்குச் செல்வது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

வேலைக்குச் செல்வதால் வாழ்க்கைமுறை மாறுகிறது. மாறும் வாழ்க்கைமுறையால் உடலுழைப்பு குறைகிறது; ஆரோக்கியமான உணவு சாப்பிடமுடிவதில்லை; தூக்கம் தடைபடுகிறது; மனஅழுத்தம் ஏற்படுகிறது. இவை அனைத்தும் நீரிழிவு, உயர்இரத்தஅழுத்தம், இதயநோய், உடல் பருமன், மனச்சோர்வு போன்ற குறைபாடுகளுக்கும் சில வேளைகளில் புற்றுநோய் போன்ற கொடியநோய்களுக்கும் காரணமாகிறது.

68 விழுக்காடு பெண்கள் வாழ்க்கைமுறை மாற்ற நோய்களால் அவதிப்படுவதாகவும், அவர்களுள் 53 விழுக்காட்டினர் வேலைப்பளு மற்றும் குறிப்பிட்ட நேரஇலக்கு (deadlines) காரணமாக ஆரோக்கியமான உணவினை உண்ணாமல் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதாகவும் ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. நகர்புற பெண்களில் 23 விழுக்காட்டினர் பணிக்குச் செல்கின்றனர். இவர்கள் நோய்வாய்ப்படுவதால் சமுதாயம்

மட்டுமல்ல, வணிகம் மற்றும் தொழில்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.

பணிக்குச் செல்லும் பெண்களை பாதிக்கும் சில நோய்கள்
சினைப்பை நீர்க்கட்டி: PCOS என்று அழைக்கப்படும் சினைப்பை நீர்க்கட்டி, நன்றாக பணியாற்றவேண்டிய இளம்பெண்களுக்கும் ஏற்படுகிறது. ஹார்மோன்களில் ஏற்படும் கோளாறான இது, சீரற்ற மாதவிடாய் சுழற்சி, உடல் பருமன், கருத்தரிக்காமை போன்ற குறைபாடுகளுக்கு காரணமாகிறது.

உடல்பருமன்: நகர்ப்புறங்களில் வேலைக்குச் செல்வோரில் 25 முதல் 45 வயது வரையுள்ள பெண்களில் 80 விழுக்காட்டினர், மனஅழுத்தம், ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுதல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு வழக்கம் ஆகியவற்றால் உடல் எடைகூடி அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக தீவிர நோய்கள் பெண்களை தாக்குகின்றன; ஆயுள்காலம் குறைகிறது. குறிப்பாக தகவல்தொழில்நுட்பம் என்னும் ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் 10 முதல் 12 மணி நேரம் வரை அமர்ந்திருப்பதால் உடல் எடை கூடிவிடுகிறது.

மனக்கலக்கம்: குறிப்பிட்ட நேர இலக்குக்கு முன்னதாக வேலையை முடிக்கவேண்டிய கட்டாயம், நீண்டநேர பணி ஆகியவற்றால் தூக்கம் தடைபடுதல், உடற்பயிற்சியின்மை, மதுப்பழக்கம், போதை மருந்து ஆகியவற்றை பயன்படுத்துதல் போன்றவை பெண்களை மனஅழுத்தத்திற்குள்ளாய் தள்ளுகின்றன.

முதுகுவலி: நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல், உட்காரும் முறை சரியில்லாமல் அமர்தல், உடல்எடை கூடுதல் ஆகியவற்றின் காரணமாக பணிக்குச் செல்லும் பெண்களுக்கு முதுகுவலி உண்டாகிறது.

காலையில் அலுவலகத்திற்குச் சென்று மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வெளியே வருவதால் இவர்கள் உடலில் சூரியஒளிபடுவதற்கு வாய்ப்பில்லை. இதன் காரணமாக வைட்டமின் டி குறைவு ஏற்பட்டு அசதி, எலும்பில் வலி போன்றவை வருகிறது. சினைப்பை நீர்க்கட்டிகளால் கருத்தரித்தல் தாமதமாகிறது. கருவுற்ற பெண்களையும் கருவிலிருக்கும் குழந்தைகளையும்கூட வாழ்க்கைமுறை மாற்றம் பாதிக்கிறது. பணிக்குச் செல்லும் பெண்களை மார்பக புற்றுநோய் தாக்குவது அதிகமாகியுள்ளது.

என்ன செய்வது?

சரியான விகிதத்தில் புரதஉணவுகள், ஆரோக்கியமான கொழுப்பு, மாவுச்சத்து என்னும் கார்போஹைடிரேட், நார்ச்சத்து ஆகிவற்றை உண்ண வேண்டும். உணவு உண்ணாமல் தவிர்க்கக்கூடாது. முறையான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யவேண்டும். யோகாசனம் மற்றும் ஏரோபிக்ஸ் என்னும் தரையில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். நாளொன்று 7 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவும், நல்ல உடற்பயிற்சியும் இருந்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம். மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்திருங்கள்; தேவையற்ற கவலைகளை தவிர்ப்பது ஆயுளை கூட்டும்.

You'r reading வேலைக்குச் செல்லும் பெண்களை வாட்டும் நோய்கள் Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை