சேகர் ரெட்டியிடம் சிக்கிய 34 கோடி மணல் விற்று சம்பாதித்ததாம்... வருமானவரித் துறை தகவல்

Seized currency was business income, says Income Tax Dept

by எஸ். எம். கணபதி, Jun 21, 2019, 17:12 PM IST

பணமதிப்பிழப்பின் போது சேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய 33 கோடியே 89 லட்சம் ரூபாய் அவரது கம்பெனி மணல் விற்று சம்பாதித்தது என்று வருமானவரித் துறை அவருக்கு ‘கிளீன் சிட்’ கொடுத்துள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஞாபகமிருக்கிறதா? நிச்சயம், தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி அன்றிரவுதான் திடீரென ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். அதன்பிறகு, நமது பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்கே நீண்ட வரிசையில் காத்திருந்து தினமும் 2 ஆயிரம், 4 ஆயிரம் என்றுதான் எடுக்க முடிந்தது.

மக்கள் கரன்சிக்காக தவியாய் தவித்த நேரத்தில் 2016 டிசம்பர் 8ம் தேதியன்று கான்ராக்டர் சேகர் ரெட்டி வீடு, கம்பெனிகளில் இருந்து 33 கோடியே 89 லட்சம் ரூபாய் பணத்தை வருமானவரித் துறை கைப்பற்றியது. அத்தனையும் கட்டுக்கட்டாக கட்டப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்கள். இது நாடு முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின், சேகர்ரெட்டியும், ஓ.பன்னீர்செல்வமும் திருப்பதி கோயில் வாசலில் மொட்டைத் தலையுடன் காட்சியளிக்கும் புகைப்படங்கள் வெளியாயின. சேகர்ரெட்டி ஆளும் அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளுக்கு மிக நெருக்கமானவர் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. பொதுப்பணித் துறையின் பெரிய கான்ராக்டுகள் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த விஷயங்களும் வெளிவந்தன.

இதன்பிறகு, சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச் சட்டத்தின்(பி.எம்.எல்.ஏ) கீழ் அவர் மீதும், அவரது கம்பெனி மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. சி.பி.ஐ. 3 வழக்குகள் போட்டது. அமலாக்கப்பிரிவு அவரது சொத்துக்களை முடக்கியது. அதன்பிறகு, எந்த சத்தமும் இல்லை. ஊரெல்லாம் தாங்களே நேர்மையான அரசு என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டில் கண்டுபிடித்த ஊழல்களில் மட்டும் எந்த நடவடிக்கை எடுத்தோம் என்று சொல்வதே இல்லை. எல்லாமே கிடப்பில்தான் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. சேகர்ரெட்டியிடம் பறிமுதல் செய்யப்பட்ட 33 கோடியே 89 லட்சம் ரூபாயும் அவரது எஸ்.ஆர்.எஸ். சுரங்கக் கம்பெனி, மணல் விற்று சம்பாதித்தது என்று சரியாக கணக்கு காட்டப்பட்டு விட்டதாம். அதனால், வருமானவரித் துறை அந்த வழக்கை மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்று முடித்து விட்டதாம்.

ஏற்கனவே சி.பி.ஐ. தொடர்ந்த 2 எப்.ஐ.ஆர்களை நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. அமலாக்கப்பிரிவு முடக்கிய சொத்துக்களும் விடுவிக்கப்பட்டு விட்டன. இப்போது வருமானவரித் துறையும் நடவடிக்கைகளை கைவிட்டு விட்டது.

இது பற்றி, சேகர்ரெட்டியிடம் இந்து ஆங்கிலப் பத்திரிகை நிருபர் கேட்டதற்கு, ‘‘நான் அப்பவே சொன்னேன், என் மீது தவறில்லை என்று. ஆனால், என் வீட்டில் 100 கோடி ரூபாயும், ஏராளமான தங்கமும் கைப்பற்றப்பட்டதாக கூறி, அப்போதைய ஆந்திர அரசு தேவையில்லாமல் என்னை திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது. அதுதான் வேதனையாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

வருமானவரித் துறை கூறியது சரியாக இருக்கலாம். சேகர் ரெட்டியின் கம்பெனி மணல் விற்று முறையாக வரிகட்டி அந்த பணத்தை சம்பாதித்திருக்கலாம். ஓ.கே., ஆனால், அந்த காலகட்டத்தில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் தாள் வாங்கவே ஒவ்வொருத்தரும் கால்கடுக்க வங்கியில் காத்திருந்த போது, இவரிடம் மட்டும் புது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எப்படி மொத்தமாக கிடைத்தன? அதை எந்த வங்கி கொடுத்தது? ரிசர்வ் வங்கியே அச்சடித்த இடத்தில் இருந்து இவரது கம்பெனிக்கு அனுப்பியதா? இப்படி கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன. ஆனால், அதற்கு பதிலளிக்க யாரும் இல்லை.

You'r reading சேகர் ரெட்டியிடம் சிக்கிய 34 கோடி மணல் விற்று சம்பாதித்ததாம்... வருமானவரித் துறை தகவல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை