வீட்டுக்குள் இருக்கும் குட்டி சாத்தான்கள்

Get Rid Of These 5 Toxic Products From Your House IMMEDIATELY!

by SAM ASIR, Jun 29, 2019, 18:23 PM IST

உடல் நலத்தை குறித்து எத்தனையோ குறிப்புகள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் வந்து கொண்டிருக்கின்றன. மருத்துவரீதியாக அவை சாத்தியமானவையா என்றெல்லாம் சிந்திக்காமல் அதுபோன்ற குறிப்புகள் பலவற்றை கடைபிடிக்கும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், வசதியென்று நாம் வீட்டுக்குள் வைத்திருக்கும் பல பொருள்கள் நச்சுத்தன்மை மிகுந்தவை என்பதை அறியாதிருக்கிறோம்.

பிளாஸ்டிக் டப்பா:

பொருள்களை போட்டு வைக்க வசதியாக மட்டுமல்ல பார்வைக்கு அழகாக இருக்கும் என்று பிளாஸ்டிக் பெட்டிகளை வாங்கி குவிக்கிறோம். சிலர் உணவு பொருள்கள் வரும் பிளாஸ்டிக் கலன்களை சுத்தப்படுத்தி வைக்கிறார்கள். அவற்றில் வேதிப்பொருள்கள் இருப்பதால் உடல்நலத்திற்குக் கேடு விளையும். பாலிகார்பனேட் அடங்கிய பிளாஸ்டிக் பெட்டிகளில் பி.சி (PC) முத்திரையிடப்பட்டிருக்கும்.

பிஸ்பினால் ஏ போன்ற (bisphenol A - BPA) நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் அடங்கியிருக்கும் என்பதை PC குறியீடு உணர்த்துகிறது. பிஸ்பினால் ஏ, சுவாச கோளாறு, இதய கோளாறு, இரத்த அழுத்த உயர்வு ஆகியவற்றுக்குக் காரணமாகலாம். இதுபோன்ற பிளாஸ்டிக் டப்பாக்களை அகற்றி விட்டு கண்ணாடி கலன்களை பயன்படுத்துவது நல்லது. ஒப்புநோக்க கண்ணாடி கலன்கள் அந்த அளவுக்கு ஆபத்து கொண்டவை அல்ல.

ஏர் ஃபிரெஷ்னர்:

அறைக்குள் துர்நாற்றம் வருவது போல உணர்ந்தால் உடனடியாக வாசனைக்காக ஏர் ஃபிரெஷ்னர் பயன்படுத்துகிறோம். இது நாமாகவே சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வதுபோன்றது. இவற்றை தெளித்தபிறகு நீண்டநேரம் அறைக்குள் வாசனை நிலவுவதற்கு அதில் இருக்கும் வேதிப்பொருள்களே காரணம்.

பழைய டூத் பிரஷ்:

பல் துலக்க பயன்படுத்திய நாள்பட்ட, பழைய பிரஷ்கள் பலருடைய வீடுகளில் குளியலறைகளுக்குள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை சேகரித்து யாரும் அருங்காட்சியகத்தில் வைக்கப்போவதில்லை. பயன்படுத்தி முனைகள் மழுங்கி, மடங்கி, நிறம் மங்கி போன பிரஷ்களை அகற்றவேண்டும். உடல்நிலை சரியில்லாமல் சளி, காய்ச்சல் இருந்த நாள்களில் பயன்படுத்திய பிரஷ்களில் நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். மீண்டும் அவற்றை பயன்படுத்தினால், கிருமிகள் பிரஷ்களிலிருந்து உடலுக்குப் பரவ கூடும்.

பழைய ஆடைகள்:

இனி அணிய முடியாது என்ற நிலையிலுள்ள பழைய ஆடைகளை அகற்றாமல் பலர் அப்படியே விட்டிருப்பார்கள். ஏதோ பீரோ நிறைய ஆடை இருக்கும் உணர்வை அவை அளிக்கும். அதைத்தவிர வேறு பயனில்லை. "ஒரு காலத்தில இந்தச் சட்டையை போட்டேன்... இப்போது உடம்பு பெரிதாகிவிட்டது" என்ற நினைப்பை தூண்டி, பருத்த உடலைக் குறித்த மனவேதனையை அளிப்பதை தவிர அவற்றால் வேறு பலனில்லை.
காய்கறி நறுக்கும் பிளாஸ்டிக் அட்டை:

காய்கறிகளை நறுக்குவதற்கு இவை அதிக பயனுள்ளவை என்பதில் ஐயமில்லை. ஆனால், ஒவ்வொருமுறை காய்கறிகளை நறுக்கும்போதும் அந்த அட்டையில் சிறுசிறு குழிகள் உருவாகும். நம் கண்ணுக்குத் தெரியாத இந்தப் பிளவுகளில் கிருமிகள் தங்கக்கூடும். காய்கறிகள், கீரைகள் புதியனவாய் இருந்தாலும் இந்தப் பிளவுகளுக்குள் இருக்கும் கிருமிகள் அவற்றில் தொற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு. ஆகவே, பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக மரப்பலகைகளை வாங்கி பயன்படுத்தலாம். மரத்திற்கு இயல்பாகவே கிருமி நாசினி பண்பு உண்டு.

You'r reading வீட்டுக்குள் இருக்கும் குட்டி சாத்தான்கள் Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை