ஒரு நிறுவனம் முன்னேறுவதற்கு பணியாளர்களின் பணிதிறன் முக்கியம். பணியாளர்கள் முழு பணிதிறனை காட்டினால்தான் நிறுவனம் லாபம் ஈட்டவும், பெயர் பெறவும் முடியும். பணியாளர்களும் பணிதிறனும் என்ற தலைப்பில் ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ என்ற பத்திரிகை ஆய்வொன்றை வெளியிட்டுள்ளது.
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு, மகிழ்ச்சி மற்றும் திருப்தி, முன்னுரிமை மற்றும் நோக்கம், முக்கியத்துவம் மற்றும் அர்த்தம் என்ற ஐந்து தலைப்புகளில் உலக அளவில் 20,000 பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
நிர்வாகமும் முதுநிலை அதிகாரிகளும் பணியாளர்களுக்கு உரிய மரியாதை அளித்தால் அவர்களின் பணிதிறன் உயரும் என்று அறிவியல் பூர்வமாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. ஆகவே, பணியாளர்களின் முழு பணிதிறன் வெளிப்படுவதற்கு உரிய மரியாதையுடனும் கனத்துடனும் அவர்களை நடத்தவேண்டும் என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.
நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ளோரால் மரியாதையாக நடத்தப்படும் பணியாளர்களின் உடல்நலமும் நல வாழ்வும் 56 விழுக்காடு உயர்ந்துள்ளது. மரியாதை குறைவாக நடத்தப்படும் பணியாளர்களை காட்டிலும் மரியாதையாக நடத்தப்படும் பணியாளர்கள் 55 விழுக்காடு அதிக அளவு வேலையில் ஈடுபாடு காட்டியுள்ளனர்.
பணியிடங்களில் உரிய மரியாதை பெறும் பணியாளர்கள் வேலையில் 89 விழுக்காடு திருப்தியையும் மகிழ்ச்சியையும் எட்டியுள்ளனர். பணியில் கவனம் மற்றும் முன்னுரிமை அளிக்கும் விஷயத்தில் 92 விழுக்காடு உயர்வை எட்டியுள்ளனர்.
உயர்பொறுப்பிலிருப்போரின் அங்கீகாரம் கிடைக்கப்பெறும் பணியாளர்கள், அதே நிறுவனத்தில் தொடருவதற்கான வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் 1.1 மடங்கு அதிகம். பாராட்டு, நிறுவனத்தின் நோக்கத்தை சரியான விதத்தில் பகிர்ந்து கொள்ளுதல், தேவையான பின்னூட்டங்களை அளித்தல், புதியனவற்றை கற்றுக்கொள்ள வாய்ப்பு அளித்தல் போன்றவை கிடைத்தால் பணியாளர்கள் அதே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
'பணியிடங்களில் இதமாக நடந்துகொள்ள முடியாதது ஏன்?' என்றும் ஓர் ஆய்வு 125 பணியாளர்களிடம் நடத்தப்பட்டது. அவர்களுள் 60 விழுக்காட்டினர், பணிச்சுமை காரணமாக மற்றவர்களிடம் இதமாக நடந்து கொள்ள இயலவில்லை என தெரிவித்துள்ளனர். நிறுவனத்தில் முன்னுதாரணமாக கொள்ளத்தக்க அதிகாரிகள் இல்லை எனவும், அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நடந்து கொள்வதுபோலவே தாங்கள் நடந்து கொள்வதாகவும் 25 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
தனி ஒரு பணியாளர் உணர்வதையே பணியாளர் சமுதாயத்தில் பெரும்பான்மையினர் உணர்வார்கள். ஒட்டு மொத்த பணியாளர் சமுதாயமும் என்ன உணர்கிறார்களோ அது நிச்சயமாக நிறுவனத்தின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, பணியாளர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் அளிக்கப்படவேண்டியது அவசியம்.