வேலையில் சலிப்பு தட்டுகிறதா, என்ன செய்யலாம்?

Feeling stagnant in your career? Heres how you can still climb the corporate ladder

by SAM ASIR, Jul 3, 2019, 22:47 PM IST

எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், துடிப்பாக வேலை செய்தாலும் புரொபஷனல் லைஃப் என்னும் தொழில்முறை வாழ்க்கையில் சலிப்பு தட்டுவது நடக்கும் ஒன்று. இப்போது இருக்கும் வேலையில் திருப்தி இல்லையா? புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல், வேலையை விட்டுவிட தூண்டுகிறதா? ஊதிய உயர்வு கிடைக்காததால் அதிருப்தியா? இதுபோன்ற காரணங்களால் வேலையில் தேக்கம் ஏற்படக்கூடும்.

நீங்களும் இந்தக் கட்டத்தில் இருந்தால் கீழ்க்காணும் குறிப்புகள் உங்களுக்கு உதவ கூடும்.

காரணத்தை கண்டுபிடியுங்கள்:
அலுவலக வேலையில் தேக்கம் ஏற்பட காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நீண்ட நாள் கிடைக்காத பதவி உயர்வு, புதிதானவற்றை கற்றுக்கொள்ள மறுக்கப்படும் வாய்ப்பு என்று ஏதாவது ஒன்று உங்கள் மனதில் தடையை கொண்டு வந்திருக்கும்.

அந்த காரணத்தை துல்லியமாக அடையாளம் கண்டு கொள்ளுங்கள். பிரச்னையை புரிந்துகொண்டால்தான் அதற்குத் தீர்வு காண இயலும்.

தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்:
பெருநிறுவன வேலை என்பது புரண்டு வரும் வெள்ளம் போன்றது. அதில் உங்களை பாதுகாப்பாக தக்க வைத்துக்கொள்ள திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். "இவ்வளவு நாள் இங்கே தான் இருக்கிறேன். எனக்கு தெரியாதது எதுவும் இருக்க இயலாது," என்ற தன்னம்பிக்கை உங்களுக்குள் இருக்கக்கூடும்.

ஆனால், வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிதாக சான்றிதழ் படிப்புகளில் சேர்வது, ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்வது, வொர்க் ஷாப் என்னும் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்வது என்று ஏதாவது ஒன்றின் மூலம் புது விஷயங்களை கற்றுக்கொள்வது அவசியம்.
வாய்ப்புகளை கேட்டுப் பெறுங்கள்:

இன்னொரு வேலைவாய்ப்பு கையில் இல்லாத நேரத்தில் பணி விலகல் முடிவு, புத்திசாலித்தனமானது அல்ல. வேலையில் சலிப்பு தட்டினால், உங்கள் மேலாளர் அல்லது மேலதிகாரியிடம் உங்களை வருத்தும் விஷயங்கள் குறித்து பேசலாம்.

உங்களுக்கென்று கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை மாற்றித் தரும்படி கூட அவரிடம் கோரலாம் அல்லது நிறுவனத்தின் வேறொரு துறைக்கு மாற்றும்படி விண்ணப்பிக்கலாம். எல்லாவற்றுக்குள் மேலாக உங்கள் வேலைதிறன் குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

தனி ஆவர்த்தனம்

புதிய வேலை கிடைப்பதற்கு சில மாதங்கள் ஆகக்கூடும். அதுவும் புதிய துறையில் வேலை தேடினால் சற்று காலதாமதமாகலாம். புதிதாக ஓர் அலுவலகத்தில் சேரும் வரைக்கும் உங்களுக்குத் தெரிந்த வேலையை ஃப்ரீலான்ஸ் ஆக செய்யலாம்.

தொடர்பு வட்டம்

தொழில்முறை வேலைகளை பொறுத்த மட்டில் புதிய வேலை தேடுவது, ஃப்ரீலான்ஸ் வாய்ப்பு, வேலை சார்ந்த ஆலோசனைகள் ஆகிவற்றை பெறுவதற்கு தொடர்பு வட்டம் பெரிய அளவில் உதவி செய்யக்கூடும். ஆகவே, யாரையும் அலட்சியம் செய்யாமல் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இடைவெளி

எடுத்தவுடன் பேப்பரை வீசியெறிந்து வேலையை விட்டுவிட வேண்டுமென்பதல்ல. வேலையில் சலிப்பு தோன்றினால், ஓர் இடைவெளி விடலாம். நிர்வாகத்திடம் பேசி விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அலுவலக சூழல், அலுவலக அரசியல் இவற்றை விட்டு சற்று விலகியிருக்கும்போது மனம் சற்று தெளிவாகும். பதற்றமாக அல்ல, திடமாக தீர்மானம் எடுக்க அது உதவும். தவிர்க்க இயலாத சூழல் இல்லாவிட்டால் வேலையில் உற்சாகமாக தொடர இது உதவும்.

மனம் தளராதீர்கள்

அனைத்து தொழில்முறை வல்லுநர்கள் வரலாற்றிலும் இதுபோன்ற சலிப்பு தட்டும் தருணங்கள் உண்டு. உங்களுக்கு மட்டும் இச்சூழல் வாய்த்துள்ளது என்று அங்கலாய்த்து மனந்தளர்ந்து போகாதீரகள். உயர்பதவிகளில் இருக்கும் அனைவருமே ஒரு காலகட்டத்தில் இதுபோன்ற சூழலை கடந்தே வந்திருப்பார்கள். ஆகவே, எதிரே உள்ள வாய்ப்புகளை மட்டுமே பாருங்கள்; மூடப்பட்ட கதவுகளை வெறித்து பார்த்து நேரத்தை வீணாக்குவதை அது தவிர்க்கும்.

You'r reading வேலையில் சலிப்பு தட்டுகிறதா, என்ன செய்யலாம்? Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை