வருகிறது தூக்கப் பயிற்சி

by SAM ASIR, Aug 6, 2019, 17:41 PM IST
Share Tweet Whatsapp

தூங்குவதற்கு யாராவது பயிற்சி கொடுப்பார்களா? தற்போது உலக நாடுகளில் பெருநிறுவனங்கள், தங்கள் பணியாளர்களின் தூக்கம் குறித்த அறிக்கையை பெற்று அதன் அடிப்படையில் அவர்களை தூக்கவியல் நிபுணர்களிடம் பயிற்சிக்கு அனுப்புகின்றன.

இரவு, பகல் 24 மணி நேர வேலை, இரவு பணி, டிஜிட்டல் சாதனங்களுடன் பணி, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அளவில் மக்களின் தூக்கத்தை கெடுத்துள்ளன. ஐந்து பேரில் இருவர் தூக்கத்தில் பிரச்னையுள்ளவர்களாய் காணப்படுகின்றனர்.

வணிக செயல்பாட்டு அலுவலகங்கள் (BPO)

BPO என்னும் வணிக செயல்பாட்டு அலுவலகங்களில் பணியாற்றுவோர், உடல் கடிகாரத்தின் தூக்க நேரத்திற்கு மாறான பணிவேளைகளில் பணியாற்ற நேரிடுகிறது. மாலை 6 முதல் அதிகாலை 2 மணி வரை மற்றும் அதிகாலை 2 முதல் காலை 10 மணி வரை என்று வெவ்வேறு ஒவ்வாத பணிவேளைகளில் கண் விழித்து பணியாற்றுவதால் உடல்நல பாதிப்புக்குள்ளாகின்றனர்.

வெவ்வேறு பணிவேளைகளில் (shifts) பணியாற்றுவதால் 85 விழுக்காட்டினர் உறக்கம் வராமல் தவிப்பதாகவும், 75 விழுக்காட்டினர் தூங்கி எழும்பிய பிறகு புத்துணர்வு அடையாமல் இருப்பதாகவும் 68 விழுக்காட்டினர் அசிடிட்டி என்னும் வயிற்று அமில பிரச்னையால் பாதிக்கப்படுவதாகவும் 66 விழுக்காட்டினர் காஃபைன் அடங்கிய பானங்களுக்கு அடிமையாக நேரிடுவதாகவும் 35 விழுக்காட்டினர் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமைகளாவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பணியில் பாதிப்பு

தூக்க பிரச்னையுள்ளவர்களின் செயல்திறன் பாதிக்கப்படுவதால் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.. பணியாளர்கள் அவர்களது முழு திறனை காட்டி வேலை செய்ய இயலாது; குறுகிய கால அளவுக்குள் வேலையை முடிக்க இயலாது; உத்வேகத்தை இழக்க நேரிடும். இதனுடன் கூட உடல்நலனும் பாதிக்கப்படும்.

உடல் நல பாதிப்பு

சரியாக தூங்காதவர்களுக்கு உடல் எடை அதிகரித்தல், பகல்வேளையில் தூக்க கலக்கம், கவனச்சிதைவு, மனவோட்டம் மாறுதல், மனக்கலக்கம், மனச்சோர்வு மற்றும் உடல் வலி ஆகிய உடல்ரீதியான பாதிப்புகளும் வரும்.

பயிற்சி

நிறுவனங்கள், தங்கள் பணியாளர்கள் தூக்க பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று அறிவதில் ஆர்வம் காட்டுகின்றன. அனுபவமுள்ள பணியாளர்கள் இதுபோன்ற பிரச்னையில் சிக்கி வேலையை விட்டு நிற்க நேரிட்டால் அவர்களது அனுபவத்தை இழக்க நேரிடும் என்பதால் தூக்கவியல் ஆலோசகர்கள், வல்லுநர்கள் ஆகியோரிடம் பணியாளர்களை அனுப்பி போதுமான நேரம் உறங்குகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்வதிலும் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.


Leave a reply