ஜம்மு & காஷ்மீர் விவகாரத்தில் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம்
தலைப்பட்சமாகவும் மத்திய அரசு செயல்படுவது தேசத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்தும், அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. இதனை மாநிலங்களவையில் தீர்மானமாக கொண்டு வந்து அதனை மாநிலக் கட்சிகள் பலவற்றின் ஆதரவுடன் நிறைவேற்றவும் செய்து விட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு காட்டினாலும், அந்தக் கட்சிகளின் தலைவர்களிடையேயும் காஷ்மீர் பிரச்னை குறித்து இரு வேறு கருத்துகள் உருவாகியுள்ளது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் இந்த விவகாரத்தில் சில முக்கியத் தலைவர்கள் , அரசின் முடிவை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளது அக்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். ஜனார்த்தன் திவேதி, மிலிந்த் தியோரா போன்றோர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா கொறடாவான புவனேஷ்வர் காலிதாவோ கட்சியிலிருந்தே ராஜினாமா செய்து விட்டார்.
இந்நிலையில் நேற்று காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாக கருத்து ஏதும் கூறாமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மவுனம் சாதித்து வந்ததும் பெரும் கேள்விக்குறியை எழுப்பியிருந்தது. இந்நிலையில் ராகுல் காந்தி தனது மவுனத்தை கலைத்து இன்று டிவிட்டரில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தமது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், ஜம்மு மற்றும் காஷ்மீரை ஒருதலைப் பட்சமாக பிரிப்பதிலோ, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கைது செய்வதிலோ மற்றும் நமது அரசியலமைப்பினை மீறுவதிலோ தேசிய ஒருமைப்பாடு வளர்ச்சி அடைந்து விடப் போவதில்லை என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்களால் உருவானது தான் நமது நாடே தவிர நிலங்களால் அல்ல என்றும், இந்த அதிகார துஷ்பிரயோகம் நமது தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.
இந்திய ஜனநாயகத்தில் இன்று கருப்பு தினம்; மெகபூபா முப்தி கண்டனம்