காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370ஐ ரத்து செய்தது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உமர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35A சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளது மாநில உரிமையின் மீதான அடிப்படையையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இதனால் மிகவும் மோசமான, ஆபத்தான விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“மத்திய அரசின் அதிர்ச்சிகரமான முடிவுகள், ஜம்மு காஷ்மீர் மக்கள் வைத்த நம்பிக்கைக்கு செய்த முழு துரோகமாகும். ஜம்மு காஷ்மீருக்கு எதிராக எதுவும் திட்டமிடப்படவில்லை எனக் கூறிவிட்டு, காஷ்மீரின் ஜனநாயகக் குரலை முடக்கி லட்சக்கணக்கான ஆயுதம் தாங்கிய வீரர்களை மாநிலம் முழுவதும் நிறைத்துள்ளது எவ்விதத்தில் நியாயம்?” என்றும் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.