காதல் தொடர வேண்டுமா? இந்தப் பொய்களை சொல்லாதீர்கள்!

by Nagaraj, Aug 18, 2019, 10:21 AM IST

'கவிதைக்குப் பொய் அழகு' என்பது வைரமுத்துவின் வரி. ஆனால், காதலுக்கு பொய் அழகு சேர்க்காது; மாறாக, ஆபத்தை கொண்டு வந்து விடும்! காதலுக்கு அடிப்படை நம்பிக்கையே. காதலாக இருக்கட்டும்; இல்லறமாக இருக்கட்டும்; ஆண், பெண் உறவின் மிக முக்கியமான விஷயம் நம்பிக்கைதான்!


நீங்கள் பொய் கூறுகிறீர்கள் என்று உங்கள் காதலனுக்கு / காதலிக்கு தெரிந்து விட்டால் உங்கள் மீது அவருக்கு உள்ள நம்பிக்கை குலைந்துவிடும்; காதல் முறிந்துவிடும்.
பழைய காதல் பற்றிய பொய்
பழைய காதல் கதை ஏதாவது உங்களுக்கு இருந்தால், முந்தைய காதலர் / காதலியுடன் பழகுவது என்பது உங்கள் தனிப்பட்ட விஷயம். ஆனால், முன்பு அப்படி ஓர் உறவில் இருந்தீர்கள் என்பதை மறைத்து, அது உங்களவருக்கு ஒருநாள் தெரிய வந்தால் மனவருத்தம் ஏற்படக்கூடும்.

 

நீங்கள் கொண்டிருக்கும் காதல்மேல் அவருக்கு சந்தேகம் வந்தால், அது வளர்ந்து பிரிவு வரைக்கும் செல்லக்கூடும். கூடுமானவரை பழைய காதல் பற்றி பொய் கூறவேண்டாம்.
எனக்கும் ஓகேதான் என்ற பொய்
சில வேளைகளில் சூழ்நிலை கருதி உங்கள் உண்மையான உணர்வுகளை மறைத்து "எனக்கு ஓகேதான்ப்பா" என்று நீங்கள் கூறியிருக்கலாம். உண்மையாக மனம், அந்த சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் புதைக்கப்பட்ட உணர்வு மற்றும் கசப்பு உள்ளுக்குள்ளே வளரும். அது ஒருபோதும் உங்கள் உறவுக்கு நன்மை செய்யாது.

 

ஆகவே, உங்களுக்கு ஒத்துக்கொள்ளாத சூழ்நிலையை நயமாக உணர்த்திவிடுவதே நல்லது.
'ஓவரா போகல' என்னும் பொய்
நீங்கள் ஓர் உறவில் இருக்கும்போது, அலுவலகத்தில் அல்லது தோழமை வட்டத்தில் உள்ளவர்களிடம் அளவுக்கு அதிகமாக நெருக்கம் காட்டி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

 

"ஓ, அவன் ஃப்ரண்ட் மட்டும்தான்," போன்ற சமாளிப்புகள் காதலுக்கு ஏற்றவை அல்ல!
சம்பளம் பற்றிய பொய்
உங்கள் ஆடம்பர வாழ்க்கை முறை அல்லது பெரிய சம்பளம் நிச்சயமாகவே உங்களைப் பற்றி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும். ஆனால், அது தற்காலிகம்தான். உண்மையை மறைத்து செல்லும் பாதை நிரந்தரமானதல்ல; வேறொருவராக நீங்கள் நெடுநாள் நடிக்க இயலாது.

 

காதல் என்றால் இருவருமே மற்றவர்களைப் பற்றிய உண்மையை அறிந்திருக்கவேண்டும்.
'அந்த' உறவு பற்றிய பொய்
காதலருடனான பாலியல் நெருக்கம் உங்களுக்கு திருப்திகரமாக இல்லையென்றால், உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கவில்லையென்றால் அதை உரியவிதத்தில் கூறலாம். பாலுறவு அனுபவம் பற்றிய பொய், நிலைமையை இன்னும் மோசமாக்கும். நீங்கள் விரும்புவீர்கள் என்று நினைத்து உங்கள் காதலன் / காதலி பாலியல் உறவில் சில செயல்களில் ஈடுபடலாம். உண்மையில் அதில் உங்களுக்கு விருப்பம் இல்லையேல் சங்கடமாக அமைந்து விடும். சரியான முறையில் நீங்கள் அவருக்கு தெரிவித்தால் பாலியல் உறவு உண்மையில் சந்தோஷத்தை தரும்.


'உங்கள் விருப்பமே என் விருப்பம்' என்ற பொய்
காதலின் ஆரம்பத்தில், 'இது உனக்குப் பிடிக்குமா? எனக்கும்தான்!' என்று அடித்துவிடுவது ஒரு சந்தோஷத்தை கொடுக்கலாம். ஆனால், எவ்வளவு நாள்தான் காதலனுக்கு / காதலிக்கு பிடிக்கிறதே என்பதற்காக உண்மையில் உங்களுக்கு விருப்பமில்லாதவற்றை 'விரும்புகிறேன்' என்று கூற இயலும்? அப்படியே நடித்துக்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில், "இது உனக்கு பிடிக்கிறதா?" என்று காதலனோ /காதலியோ கேட்க தேவையில்லாத நிலை ஏற்படும். உங்கள் விருப்பம் உள்ளிருந்து மனதில் நெருக்கத்தைக் கொடுக்கும்.


'நான் ரொம்ப கரெக்ட்' என்னும் பொய்
ஏதாவது ஒன்று தவறாக நடந்துவிட்டால், "நான் ஒண்ணும் தப்பு செய்யலை.

 

உன் தப்புதான்" என்று உங்கள் காதலன் /காதலிமேல் பழியை போடக்கூடாது. நீங்கள் செய்த தவற்றை செய்யவில்லை என்று பொய் கூறுவது, உங்கள்மேல் அவர் கொண்டிருக்கும் மரியாதையை குலைக்கும். உணர்ச்சி ரீதியாக அவர் காயப்படுவார்; அது காதலுக்கு நல்லதல்ல. ஆகவே, தவற்றை தவறு என்று ஒப்புக்கொள்வதே ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்கும். 


Leave a reply