சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில், நடத்துநர் ஒருவர், குழப்பத்தில் வேறு பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார்.
சரவணா சுப்பையா இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான ஏ.பி.சி.டி படத்தில், வடிவேலு நடத்துநர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில், பாரிஸ் செல்லும் பேருந்து ஏறுவதற்கு பதிலாக தாம்பரம் பேருந்தில் வடிவேலு ஏறிவிடுவார்.
இதேபோல், ஆத்தூர் பேருந்து நிலையத்தில் உண்மை நிகழ்வு நடந்துள்ளது. சிதம்பரத்தில் இருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து ஒன்று வந்தது. அதிலிருந்து கீழே இறங்கிய நடத்துநர், கையெழுத்து போட அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
திரும்பி வந்த போது, அங்கு ஒரே நிறத்தில் இரண்டு, மூன்று பேருந்துகள் நின்றிருந்ததால் குழப்பம் அடைந்த நடத்துநர், வேறு பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டார். நடுத்துநர் வராததால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் காக்க வைக்கப்பட்டனர்.
பின்னர் நடத்துநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் வேறு பேருந்தில் ஏறிச் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அந்த பேருந்தில் வந்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. வடிவேலுவை போல் அரசு பேருந்து கன்டக்டரும் கன்பியூஸ் ஆனதை நினைத்து பயணிகள் சிரித்தபடியே சென்றனர்.