சின்னப் பையனை விட்டு பேச வைத்தால் நாங்களும் ரொம்பப் பேசுவோம் என்று தேமுதிகவுக்கு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எடக்கு மடக்காக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவுடனான கூட்டணிக்கு தேமுதிக போக்கு காட்டி வருகிறது. பாமகவுக்கு சமமாக அல்லது கூடுதலாக சீட் கேட்டு தேமுதிக முரண்டு பிடிக்கிறது.
தேமுதிகவின் பிடிவாதத்தால் அதிமுக தரப்பு எரிச்சலில் உள்ளது. முதல்வர் எடப்பாடி முதல் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் தேமுதிக குறித்து விதவிதமான விமர்சனங்களையும், கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.
அமைச்சர் ஜெயக்குமார் தேமுதிக வந்தால் சந்தோசம், வராவிட்டாலும் வருத்தமில்லை என்றார். அமைச்சர் வெல்ல மண்டி நடராஜளோ, தேமுதிகவுடனான கூட்டணி ரொம்ப ரகசியம் என்றார்.
இந்நிலையில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக மேடைகளில், எங்கள் கட்சி பலம் என்ன தெரியுமா?கூட்டணிக்காக எங்க வீட்டு வாசல்ல தவம் கிடக்கிறார்கள் என்றெல்லாம் பேசி வருவதற்கு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சின்னப் பையனை விட்டு தேமுதிக பேசவைக்க வேண்டாம்... அப்புறம் நாங்க ரொம்பப் பேசுவோம். மார்ச் 5-ந் தேதிக்குப் பிறகு வேடிக்கையை பாருங்க.. எது வருது? எது போகுது? என்று தெரியும் என்று எடக்கு மடக்காக தேமுதிக பற்றி பேசி சலசலப்பை அதிகரித்துள்ளார்.